search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தண்டுமாரியம்மன் சிலை பிரதிஷ்டை
    X

    தண்டுமாரியம்மன் சிலை பிரதிஷ்டை

    கும்பாபிஷேக விழாவையொட்டி கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோபுரங்களில் கலசங்கள் வைக்கப்பட்டன.
    கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையம் சிக்னல் அருகே தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்ததால் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேக விழா கடந்த 8-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, தன பூஜை மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து தீபாராதனை, புண்யாஹவாசனம் நடந்தது. நேற்று முன்தினம் காலை புண்யாகம், நவகிரக ஹோமம், தீபாராதனையும், மாலை வாஸ்து சாந்தி, விக்னேஸ்வர பூஜை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலையில் யாகசாலை அலங்கார நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து கருவறையில் தண்டுமாரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவிலில் கலசங்கள் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு, ராஜகோபுரத்தில் 5 கலசங்களும், கருவறையின் மீது 3 கலசங்களும், விநாயகர், கருப்பராயன், நவக்கிரகம் ஆகியவற்றில் தலா ஒரு கலசங்கள் உள்பட 12 கலசங்கள் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ., பிந்து மோகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது தங்கம், வெள்ளி போன்றவற்றை சிலர் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர். மாலை 4.15 மணிக்கு புண்யாகம், அங்குரார்பணம், ரக்‌ஷாபந்தனம், கும்பஅலங்காரம், யாகசாலை அமைத்தல், முதற்கால யாக பூஜை, திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை 2-ம் கால யாக பூஜை உள் பட பல்வேறு பூஜைகளும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை பல்வேறு பூஜைகள் நடக்கிறது.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் காலயாக பூஜை, மகா பூர்ணாஹுதி, கலசங்கள் புறப்பாடு, காலை 6.45 மணி முதல் காலை 7 மணிக்குள் தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×