search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    4 ஆண்டுகளாக பூட்டு போடப்பட்டிருந்த சேலம் திருமலைகிரி கோவில் திறப்பு
    X

    4 ஆண்டுகளாக பூட்டு போடப்பட்டிருந்த சேலம் திருமலைகிரி கோவில் திறப்பு

    திருமலைகிரியில் உள்ள பழமையான ஸ்ரீ சைலகிரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டு சாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
    சேலம் அருகே வேடுகாத்தாம்பட்டி பக்கமுள்ள திருமலைகிரியில் பழமையான ஸ்ரீ சைலகிரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்தனர். ஆனால் கும்பாபிஷேகத்தன்று இருதரப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோவிலுக்கு பூட்டு போடப்பட்டது. அதைத்தொடர்ந்து திருமலைகிரியையொட்டி உள்ள 21 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதனிடையே சமீபத்தில் கலெக்டர் உத்தரவின் பேரில் இருதரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து சேலம் உதவி கலெக்டர் செழியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திருமலைகிரியில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று கோவிலை திறக்க உத்தரவிடப்பட்டது.

    அதன்படி, நேற்று காலை உதவி கலெக்டர் செழியன், மேற்கு தாசில்தார் வள்ளிதேவி மற்றும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பூட்டு போடப்பட்டிருந்த கோவில் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவிலில் சாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கடந்த 4 ஆண்டுகளாக பூட்டி கிடந்ததால் கோவில் வளாகம் தூசி படர்ந்தும், குப்பைகள் நிறைந்தும் காணப்பட்டது. மேலும் கும்பாபிஷேகம் அன்று கோவில் பூட்டப்பட்டதால் அங்கு வைத்திருந்த பூஜை பொருட்கள் பயனற்ற நிலையில் கிடந்தது. இதையடுத்து கோவிலை சுத்தப்படுத்தும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து கோவில் கமிட்டி நிர்வாகிகள் கூறும் போது, ‘கோவில் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருகிற 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர். திருமலைகிரி கோவில் திறப்பையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×