search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாசி மகத்தையொட்டி கடலூர் கடலில் சாமிகளுக்கு தீர்த்தவாரி
    X

    மாசி மகத்தையொட்டி கடலூர் கடலில் சாமிகளுக்கு தீர்த்தவாரி

    மாசி மகத்தையொட்டி கடலூர் கடலில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மாசி மாதம் பவுர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் தினத்தை மாசி மகம் என்கிறார்கள். மாசி மகத்தில் கோவில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளை கடற்கரைக்கு கொண்டு சென்று தீர்த்தவாரி நடத்துவது வழக்கம்.

    தீர்த்தவாரியின் போது சாமிகளுடன் சேர்ந்து நீராடினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தீர்த்தவாரியின் போது கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதன்படி மாசிமகமான நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந் தது. இதற்காக கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோவில்களில் இருந்து சாமிகளை வாகனங்களில் வைத்து வீதி உலாவாக மேள தாளம் முழங்க தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

    காலை 7 மணியில் இருந்தே தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு சாமிகள் வீதி உலாவாக வந்து கொண்டு இருந்ததால் சில்வர் பீச்சுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை போலீசார் சரி செய்தனர். தொடர்ந்து தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு வந்த சாமிகளுக்கு கடலில் தீர்த்தவாரி நடந்தது. அப்போது பக்தர்களும் புனித நீராடினர். தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    உற்சவ மூர்த்திகளுக்கு தேங்காய், பழம் போன்ற பூஜைக்குரிய பொருட்களை வைத்து, தீபாராதனை காண்பித்து பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் சாமிகளை மீண்டும் வீதி உலாவாக கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

    தீர்த்தவாரியில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திருவந்திபுரம் தேவநாதசாமி, திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள், வண்டிப்பாளையம் அங்காளம்மன், மஞ்சக்குப்பம் ஆட்கொண்டவரதராஜபெருமாள், திண்டிவனம் செண்டூர் வரதராஜபெருமாள், புதுப்பாளையம் துர்க்காளம்மன், நெல்லிக்குப்பம் வீரபத்ரசுப்பிரமணியர், தேவனாம்பட்டினம் இடிதாங்கி மாரியம்மன், தேவனாம்பட்டினம் சீனுவாசபெருமாள், நத்தப்பட்டு முத்துமாரியம்மன், செல்லாங்குப்பம் பொட்லாயி அம்மன், மார்க்கெட் காலனி சோலை வாழியம்மன், புதுச்சேரி சோரியாங்குப்பம் செங்கழுநீர் மாரியம்மன், பெரியகுப்பம் பெரியநாயகி அம்மன் உள்பட 90-க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கலந்து கொண்டனர்.



    இதில் முதுநகர் பீமாராவ் நகர் கெங்கை மாரியம்மன் குளிர்பான பாட்டில்களாலும், நவநீதம்நகர் சோலைபுத்துமாரியம்மன், உச்சிமேடு பொட்லாயி அம்மன், ராமாபுரம் மேட்டுக்குப்பம் பொட்லாயி அம்மன் போன்ற சாமிகள் பிஸ்கெட் பாக்கெட்டுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.

    பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அவர்கள் சாமியை வழிபட்டு, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பக்தர்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் மற்றும் நீர், மோர் வழங்கப்பட்டது.

    முன்னதாக உற்சவ மூர்த்திகளுடன் மேளம், தாளம் முழங்க நகர முக்கிய சாலைகளில் நடனம் ஆடி வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் சிலர் ஆட்டம், பாட்டத்துடன் வந்தனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக வந்த சிலரையும் போலீசார் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

    காசியை விட வீசம் பெரிது என்பதற்கு ஏற்ப காசியில் நீராடிய புண்ணியத்தை விருத்தகாசி என்றழைக்கப்படும் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பெறலாம் என்பது நம்பிக்கை. அதன்படி புண்ணிய நதியாக விருத்தாசலம் மணிமுக்தாற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைந்து ஆசி வழங்குவார்கள் என கூறப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் மணிமுக்தாற்றில் நடக்கும் மாசி மகத்திருவிழாவில் திரளான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

    அதன்படி நேற்று மாசி மகம் என்பதால் ஏராளமான மக்கள் திதி கொடுப்பதற்காக மணிமுக்தாற்றில் குவிந்தனர். அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஊற்று குழிகளில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர் அனைவரும் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×