search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி
    X

    கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி

    திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கவுதமநதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி போன்றவை முக்கியமான நிகழ்ச்சிகளாகும். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்வுகள் சிறப்புமிக்கது.

    தை மாதம் 5-ம் நாள் தென்பெண்ணையாற்றிலும், ரத சப்தமியன்று செய்யாற்றிலும், மாசி மகத்தன்று கவுதம நதியிலும் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    மாசி மகம் நட்சத்திர தினமான நேற்று திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதியில் அருணா சலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை சுமார் 9 மணியளவில் சந்திர சேகரர் திருவடிவில் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் அவர் கோவிலில் இருந்து பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதியில் தீர்த்த வாரிக்கு சென்றார்.

    அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணியில் பெரும் பங்காற்றியவர் வள்ளால மகாராஜா. இவர் குழந்தை பேறு இல்லாமல் தவித்தபோது, சிவபெருமானே குழந்தையாக தரிசனம் அளித்ததாக ஆன்மிக புராணங்கள் தெரிவிக்கிறது. எனவே, சுகநதி ஆற்றங்கரையோரம் நடந்த போரில் உயிரிழந்த வள்ளால மகாராஜாவுக்கு ஆண்டுதோறும் மாசி மகத்தன்று அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரியும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அதன்படி நேற்று தீர்த்தவாரி மற்றும் திதி அளித்தல் நிகழ்ச்சி கவுதம நதியில் நடைபெற்றது.



    கவுதமநதியில் தற்போது தண்ணீர் இல்லாததால் பெரிய தொட்டி ஒன்று கட்டப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. மேலும் அதனை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தீர்த்தவாரி முடிந்தபிறகு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வன்னிய குல சத்திரிய வள்ளால மகாராஜா மடாலய சங்கத்தலைவர் முன்னாள் எம்.பி. த.வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    மேலும் மாசி மாத பவுர்ணமி நேற்று முன்தினம் இரவு 11.53 தொடங்கி நேற்று இரவு 9.32 மணிக்கு நிறைவடைந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை ஏராளமான மக்கள் கிரிவலம் சென்றனர். நேற்று காலை முதல் இரவு வரை கோவிலில் கூட்டம் அலைமோதியது. பகலில் வெயில் கொளுத்தினாலும், பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
    Next Story
    ×