search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் 1008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.
    X
    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் 1008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.

    புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு 1008 பால்குட ஊர்வலம்

    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சையை அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பால்குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படும்.

    அதன்படி தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டுக்குழு சார்பில் ஆண்டுதோறும் பால் குட ஊர்வலம் நடைபெற்று வருகிறது. அதன்படி மாசிமக திருநாளையொட்டி 13-ம் ஆண்டு 1,008 பால்குடம் ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

    பால்குட ஊர்வலத்துக்கு முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டுக்குழு அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கினார். அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே முன்னிலை வகித்தார். இதில் தலைவர் சிவசுப்பிரமணியன், செயலாளர் வேல்சாமி, பொருளாளர் துரைராஜன், துணை பொருளாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆலோசகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புன்னைநல்லூரில் கைலாசநாதர்கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு 4 ராஜவீதிகள் வழியாக சென்று மாரியம்மன்சன்னதியை அடைந்தது. அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானமும் வழங்கப் பட்டது. மாலையில் விஷ்ணுதுர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், உற்சவஅம்மனுக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×