search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி இன்று நடக்கிறது
    X

    வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி இன்று நடக்கிறது

    மாசிமகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது.
    மாசிமகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது. இதற்காக கடற்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாக்குழு சார்பில் மேடைகள் மற்றும் பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தீர்த்தவாரியில் மயிலம் முருகன், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், லட்சுமி நாராயண பெருமாள், செஞ்சி ரங்கநாதர், திண்டிவனம் நல்லியகோடான் நகர் சீனிவாச பெருமாள், புதுவை மணக்குள விநாயகர், எம்.எஸ்.அக்ரகாரம் கோதண்டராமர், ராமகிருஷ்ணாநகர் ஹயக்ரீவர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கலந்துகொள்கின்றனர்.

    இந்த ஆண்டு முதல் முறையாக மேல்மலையனூர் அங்காளம்மன் தீர்த்தவாரியில் கலந்துகொள்கிறார். இதற்காக வெளியூர்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் நேற்று இரவு புதுச்சேரி வந்தன. உற்சவ மூர்த்திகளுக்கு புதுவையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்ததும் உற்சவமூர்த்திகள் ஒருசில நாட்கள் புதுவையில் தங்கி இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளனர்.

    புதுவை போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவின்பேரில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தீர்த்தவாரியை முன்னிட்டு முத்தியால்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    வைத்திக்குப்பம் பகுதியில் இன்று வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வருவோர் தங்கள் வாகனங்களை பழைய சாராய ஆலை பகுதியில் நிறுத்திவிட்டு விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும். பகல் 1 மணிக்கு அஜந்தா சந்திப்பில் இருந்து முத்தியால்பேட்டை செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×