search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கருட வாகனங்களில் உற்சவர்கள் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தபோது எடுத்த படம்.
    X
    கருட வாகனங்களில் உற்சவர்கள் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தபோது எடுத்த படம்.

    திருமலையில் ரத சப்தமி விழா: 7 வாகனங்களில் மலையப்பசாமி வீதிஉலா

    திருமலையில் ரத சப்தமி விழா கோலாகலமாக நடந்தது. ஒரேநாளில் 7 வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ரத சப்தமி விழா நடந்தது. அதிகாலை 5.30 மணியளவில் சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் சூரிய நாராயணமூர்த்தியை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து, கோவிலின் கிழக்கு மாட வீதியில் பிரதான நுழைவு வாயில் எதிரே கொண்டு வந்து நிறுத்தினர். சூரியன் உதயமான நேரத்தில் சூரியக்கதிர்கள் உற்சவரின் பாதத்தில் விழுந்தபோது, அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகளை செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்தனர்.

    இதையடுத்து சூரிய பிரபை வாகன உலா காலை 8 மணிவரை நான்கு மாடவீதிகளில் வலம் வந்தது. வேத பண்டிதர்கள், வேத மந்திரங்களை ஓதினர். வேத மாணவர்கள் சூரியாஷ்டகம் ஷோத்திரத்தைப் பாராயணம் செய்தனர். வாகன வீதிஉலா முன்னால் கோலாட்டம், பஜனை கோஷ்டிகளின் பக்தி பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகனம், பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை கருட வாகனம் (கருட சேவை), மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை அனுமந்த வாகனம், மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணிவரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி), மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை கல்ப விருட்ச வாகனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை சர்வ பூபால வாகனம், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திரபிரபை வாகனம் நடந்தன.

    மேற்கண்ட வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    ரத சப்தமி விழாவால் நேற்று கோவிலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தைகளுடன் வரும் பெண் பக்தர்கள் ஆகியோருக்கான தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டது. கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், டோலோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை மற்றும் வாரத்தில் ஒருநாள் நடக்கும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டது.

    சுப்ர பாதம், தோமாலா, அர்ச்சனை ஆகியவை பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்காமல் ஏகாந்தமாக நடந்தது. நேற்று சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல் இன்றும் (புதன்கிழமை) சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன. வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்களுக்கு மட்டும் தரிசன அனுமதி வழங்கப்பட்டது. வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் குறைந்த எண்ணிக்கையில் சாமி தரிசனத்துக்குப் பக்தர்கள் அனுப்பப்பட்டனர்.
    Next Story
    ×