search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெங்கடாசலபதி கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி 2-வது நாள் யாகசாலை பூஜை நடந்த போது எடுத்த படம்.
    X
    வெங்கடாசலபதி கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி 2-வது நாள் யாகசாலை பூஜை நடந்த போது எடுத்த படம்.

    கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் 2-வது நாளாக யாகசாலை பூஜை

    கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 2-வது நாளாக யாகசாலை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.22½ கோடி செலவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் வருகிற 27-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 16 யாக குண்டங்கள் மூலம் இந்த பூஜைகள் நடந்து வருகிறது. திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் பூஜைகள் நடத்தப்பட்டது.

    நேற்று 2-வது நாள் யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பஞ்ச கவ்ய திவ்சமும், தொடர்ந்து பசுவும், கன்றும் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அர்ச்சகர்கள் மூலஸ்தானத்துக்கு சென்று கருவறையில் தானியத்தில் வைக்கப்பட்டுள்ள வெங்கடாசலபதி சிலைக்கு பூஜைகள் நடத்தினர். பத்மாவதி தாயார், ஆண்டாள் அம்பாள், கருட பகவான் ஆகிய சிலைகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதியும் நடந்தது.

    மேலும், காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி காப்பு அணிவித்தார். கன்னியாகுமரி திருப்பதி கோவில் உதவி செயல் அலுவலர் ரவி, விவேகானந்த கேந்திரா செயலாளர் அனுமந்தராவ், சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய உறுப்பினர்கள் மோகன்ராவ், ரவிபாபு, சீனிவாசலு, ராமராவ், சுரேஷ்குமார், சலபதி, குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரி தலைவர் கிருஷ்ணபிள்ளை, திருப்பதி தேவஸ்தான துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் சவுடு உள்பட பலருக்கும் காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து ஹோமம் நடைபெற்றது.

    யாகசாலை பூஜையில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் திருவம்பலம் நிருபர்களிடம் கூறுகையில், கன்னியாகுமரி திருப்பதி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி வருகிற 27-ந் தேதி அதிகாலை 5 மணி முதல் மாலை வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்களும் இயக்கப்படும். நாகர்கோவில் வடசேரி, களியக்காவிளை, தக்கலை, வள்ளியூர் போன்ற இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றார்.

    கும்பாபிஷேக விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், நாகர்கோவில் உதவி கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் கோவிலை பார்வையிட்டனர். 
    Next Story
    ×