search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வரும் கண்கொள்ளா காட்சியை படத்தில் காணலாம்.
    X
    பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வரும் கண்கொள்ளா காட்சியை படத்தில் காணலாம்.

    பழனி முருகன் கோவிலில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்

    பழனி முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் நடந்தது. அரோகரா பக்தி கோஷம் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூச திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ம் நாளான நேற்று தைப்பூசம் ஆகும். இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

    நேற்று மாலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி இருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பின்னர் தேர் சக்கரங்களுக்கு தீபாராதனையும், தேங்காய் உடைத்தலும் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் குடும்பத்தினர், பழனி முருகன் கோவில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    அப்போது கூடியிருந்த பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா... ஞானதண்டாயுதபாணிக்கு அரோகரா“ என்று விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர்.

    திருத்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்தப் பல்லக்கில் எழுந்தருளி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவிழாவில் 8-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. இரவு 8 மணிக்கு மேல் தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    9-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி வீதி உலாவும், இரவு 9 மணிக்கு பெரிய தங்கமயில் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் ரதவீதி உலாவும், 10-ம் திருநாளான வருகிற 24-ந்தேதி காலை 8.45 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் புதுச்சேரி சப்பரத்தில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேர் உற்சவமும் நடைபெறுகிறது. அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.

    Next Story
    ×