search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.(உள்படம்: அம்மன்)
    X
    சமயபுரம் மாரியம்மன் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.(உள்படம்: அம்மன்)

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்

    சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச தெப்ப உற்சவம் கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மாலை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணிக்கு கோவிலில் இருந்து அம்மன் பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து மாலை 5 மணிக்கு அபிஷேகமும், 7 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மனை எழுந்தருள செய்து தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பம் குளத்தில் 3 முறை வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், அம்மன் வீதியுலா வந்து ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார்.

    இன்று(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு அம்மன் தைப்பூசத்திற்கு கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம் வழியாக வட திருக்காவிரி சென்றடைகிறார். தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுதல் நடைபெறுகிறது. இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

    நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து காலை 6 மணிக்கு வட காவிரியிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி இரவு 10 மணிக்கு ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். இரவு 11 மணிக்கு அபிஷேகமும், நள்ளிரவு 12 மணிக்கு கேடயத்தில் அம்மன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து அர்த்தஜாம பூஜை நடைபெற்று கோவில் நடை சாத்தப்படுகிறது.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி மாரியம்மன் இன்று மாலை 3 மணிக்கு கொள்ளிடம் வடதிருக்காவிரியில் தீர்த்தவாரி கண்டருள செல்வதால் மாலை 3.30 மணி முதல் கோவில் நடை சாத்தப்படும் என்றும், பின்னர் நாளை காலை 5.30 மணிக்கு வழக்கம் போல் கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×