search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகராஜா கோவிலில் தைத்திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது
    X

    நாகராஜா கோவிலில் தைத்திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா கோவிலும் ஒன்று. நாகதோஷ பரிகாரத் தலங்களில் இந்த தலமும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் தைத் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் காலையில் கொடியேற்றம், மாலையில் திருவிளக்கு ஏற்றுதல், இரவு புஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    தொடர்ந்து வந்த திருவிழா நாட்களில் தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு, சாமி வாகனத்தில் எழுந்தருளல், மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, சொல்லரங்கம் போன்றவை நடைபெற்று வந்தன.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு தேரை வடம்தொட்டு இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து தேர் நாலு ரத வீதிகளையும் சுற்றி வரும். காலை 9.30 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 8.15 மணிக்கு இசை பட்டிமன்றம், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் ஆகியவை நடைபெறும்.

    10-ம் நாள் திருவிழாவான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு, 8.15 மணிக்கு நகைச்சுவை சிந்தனை பட்டிமன்றம், 9.30 மணிக்கு ஆறாட்டுத்துறையில் இருந்து சாமி கோவிலுக்கு எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். 
    Next Story
    ×