search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பொங்கட்டும் பொங்கல்...
    X

    பொங்கட்டும் பொங்கல்...

    நினைத்தாலே செங்கரும்பையும் மிஞ்சும் இனிப்பு இதயத்தில் தெரியுதே! தை மகளை வரவேற்க தமிழகம் தயாராகி கொண்டிருக்கிறது.
    நினைத்தாலே செங்கரும்பையும் மிஞ்சும் இனிப்பு இதயத்தில் தெரியுதே! தை மகளை வரவேற்க தமிழகம் தயாராகி கொண்டிருக்கிறது. கிழக்கே போகும் ரெயிலும், மேற்கே போகும் ரெயிலும் ‘புல்’ ஆகி போச்சு. பஸ்சை புடிச்சாவது ஊர்போய் சேரனும் என்று முடிவெடுத்தாச்சு. 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பஸ்களும் தயார். ஜவுளிக்கடைகளில் கூட்டம் களைகட்டுது. கரும்புகட்டும், மஞ்சள் குலையும் சந்தைகளில் வந்து குவியுது.

    மகள்களுக்கு தலைப்பொங்கல் படியாக கரும்புக்கட்டு, பச்சரிசி, வெல்லம், மஞ்சள் குலை.... என்று கொண்டுசெல்ல வேண்டிய பொருள்களை எல்லாம் பெற்றோர்களும் பட்டியல் போட்டாச்சு. அவ்வளவு ஏன் அரசாங்கமும் பொங்கல் படியை மக்களுக்கு விநியோகிக்க தொடங்கியாச்சு!

    எல்லாம் சரி பரிமளம்! முக்கியமான ஒண்ண விட்டுட்டியே என்று பாக்கியராஜின் முந்தானை முடிச்சு பட பாணியில் கேட்க வேண்டியிருக்கு. அதுதான் ‘பொங்கல்பானை’ பொங்கலுக்கு இருக்கும் சிறப்பு பொங்கல் வைக்கும் மண்பானைக்கும் உண்டு. ஆனால் இன்றைய கால கட்டத்தில் மிக முக்கியமான அந்த மண்பானை கலாச்சாரம் மறந்தும், மறைந்தும் போனதே!

    உண்மையிலேயே நமது பாரம்பரிய விழா அதே பாரம்பரியத்தோடுதான் கொண்டாடப்படுகிறதா? சிந்திக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை! தமிழன் கொண்டாடும் இந்த மரபு திருவிழாவின் மகத்துவம் சாதாரணமானதா?

    தன்னை வளப்படுத்தி வாழவைக்கும் இயற்கைக்கும் தன்னோடு மாடாய் உழைக்கும் மாடுகளுக்கும், நன்றி தெரிவித்து, கூடி பொங்கலிட்டு மகிழ்ந்து, ஒரு இனத்தின் பண்பையும், கலாச்சாரத்தையும் உலகுக்கு உணர்த்தும் உன்னதமான திருவிழா. தை மாதம் தரையை பனி ‘ஐஸ்’ வைக்கும் காலம். நடுங்கும் அந்த குளிரிலும் மகிழ்ச்சி பொங்க குளித்து பொங்கலிட அதிகாலையிலேயே தயாராகி விடுவார்கள்.

    வீட்டின் முன்பு வண்ண கோலமிட்டு அதன்மீது அடுப்புகூட்டி புது மண்பானையில் பொங்கல் வைப்பார்கள். புத்தரிசி பொங்கல் பொங்கிவரும் போது பொங்கலோடு சேர்ந்து பெண்கள் எழுப்பும் குரவை சத்தமும் சேர்ந்து அந்த பகுதியையே குதூகலிக்க வைக்கும். வெள்ளை வெளேர் வேட்டி-சட்டையில் முறுக்கு மீசையை திருக்கியபடி வலம் வரும் இளவட்டங்கள்! பட்டுப்பாவாடை தாவணியில் வரும் சிறுசுகள்! புதிதாய் முழுசேலை கட்டிய பூரிப்பில் கொசுவத்தை இடையில் சொருகி இளம்பெண்கள் நடந்துவரும் அழகு! பார்க்க கண் கோடி வேண்டுமே.

    ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று கிராமங்கள் அமர்க்களப்படும்! அந்த அனுபவத்தை உணர்வு பூர்வமாக இப்போது அனுபவிக்கிறோமா...? பாரம்பரியம் என்பதை சொல்லி வெறும் வாய்ப்பந்தல் கட்டுகிறோம். அடுத்த வீட்டில் கூட அறிமுகம் இல்லாமல் வாழ்ந்து பழகிவிட்ட நகரத்து வாழ்க்கையில் குக்கர் பொங்கலும், டி.வி. கொண்டாட்டமும் தானே பாரம்பரிய பொங்கல் அடையாளமாக பார்க்கப்படுகிறது!

    கிராமங்களும் பாரம்பரிய அடையாளத்தை தொலைத்து வருகிறது என்பதுதானே உண்மை. பொங்கல் என்றால் முதலில் நினைவுக்கு வருவது கரும்பும் புதுப்பானையும் தானே! சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை தை பிறக்கும் சில நாட்களுக்கு முன்பே கரும்புக் கட்டுகளும், புது மண் பானைகளும் வீதி வீதியாக விற்பனைக்கு குவிக்கப்பட்டிருக்கும். காட்சி கண்முன் தெரிகிறதே!

    அரை படி முதல் 2 படி அரிசி வரை வேகும் அளவுள்ள மண் பானைகளை தேர்ந்தெடுத்து வாங்குவதே தனி கலை. பானையை கையில் எடுத்து ஓட்டை ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு கைவிரல் மொழியால் அந்த பானையை தட்டி பார்ப்பார்கள். ‘கணீர்’ என்று எழும்பும் ஓசையை வைத்தே அந்த பானை நன்றாக சுடப்பட்டதுதானா? என்பதை முடிவு செய்து விடுவார்கள். மண்பானையில் பொங்கும் வெண்பொங்கல் மண்வாசனையோடு சாப்பிடவே தனிசுவையாக இருக்கும். மிஞ்சிய சாதம் மறுநாளும் கெட்டியாக உறைந்து இருக்கும். கெட்டுப்போகாது!

    ஆனால் இன்று...?!

    சில்வர் பானைகளும், பித்தளை பானைகளும்தானே பொங்கல் பானையாகி இருக்கிறது. இது அந்தஸ்துக்கான அடையாளமாக வேண்டுமானால் இருக்கும். இதோ எங்கள் பாரம்பரியத்தின் அடையாளம் என்று என்று கெத்தாக சொல்ல முடியாதே! கிட்டத்தட்ட மண்பானையில் பொங்கல் வைப்பதை தவிர்த்து விட்டோமே! பொங்கலின் அடையாள சின்னமான பொங்கல் பானை உலக நாகரீகத்தின் ஒரு மைல் கல்லாகவே வரலாறு சொல்கிறது.

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் மண்பாண்டங்களை உருவாக்கி பயன்படுத்தி இருக்கிறான். கஞ்சி கலசம் முதல் கலையம்சம் பொருந்திய கடம் வரை மண்ணால் தமிழனின் கை வண்ணத்தில் உருவானது. குளங்களில் களிமண்ணை எடுத்து வந்து தண்ணீர் விட்டு குழைத்து சக்கரத்தில் வைத்து பானை, சட்டி போன்ற மண்பாண்டங்களை தயாரிப்பார்கள். பின்னர் அதை சூளையில் வைத்து வேக வைப்பார்கள்.

    வறண்ட காலங்களில் குளங்களில் மண்ணை எடுப்பதன் மூலம் அந்த குளங்களின் ஆழம் அதிகரித்து நீர்ப்பிடிப்புக்கான கொள்ளளவும் அதிகரிக்கும். விவசாயத்துக்கும் துணைநிற்கும். ஆனால், இப்போது குளங்கள் இல்லை. இருந்தாலும் மண் எடுக்க வாய்ப்பில்லை. ஏதோ கஷ்டப்பட்டு மண்எடுத்து மண்பானைகள் செய்து வைத்தால் வாங்கவும் ஆள் இல்லை.

    நெசவாளர்களுக்கு உதவும் வகையில் வேட்டி, சட்டை வாங்குவதும், மண்பாண்ட தொழிலாளர்களுக்காக மண்பானைகள் வாங்குவதும் தமிழர்களின் கடமை. இதுதான் தமிழர்களின் பாரம்பரியத்தையும், பரம்பரையையும் வளர்க்கும்! வாழ வைக்கும். ஜல்லிக்கட்டு எங்கள் பாரம்பரியம் என்று ஒருவாரம் இரவுபகலாக முழக்கமிட்டோம். உலகையே அதிர வைத்தோம்.

    அது வாடிவாசல் திறக்கும் இடத்தை நாம் தேடிச்சென்று பார்த்து மகிழும் வெறும் காட்சி! அவ்வளவுதான். ஆனால் வீட்டுக்கு வீடு பாரம்பரிய அடையாளங்களோடு நாம் கொண்டாடுவதுதான் அந்த பாரம்பரியத்தையும், பரம்பரைகளையும், மரபுகளையும் காக்கும்!

    வீட்டுக்கு ஒரு வேட்டி- சேலை! அச்சுவெல்லம், பச்சரிசி, வெட்டி வச்ச செங்கரும்பு அத்தோடு பொங்கல் வைக்க ஒரு புதுமண்பானை! என்று முடிவெடுங்கள். பாரம்பரியத்தை கொண்டாடுங்கள். இது நம் மண்ணின் மணம். இயற்கையான பொங்கலில்தான் அந்த வாசனை இருக்கும். அதுதான் பாரம்பரியத்துன் அடையாளமாகவும் இருக்கும். 
    Next Story
    ×