search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா நாளை தொடங்குகிறது

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் தை திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா கோவிலும் ஒன்று. நாகதோஷ பரிகாரத் தலங்களில் இந்த தலமும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் தைப்பெருந் திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 10 நாள் தை திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு மங்கள இசை, 6.15 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், இரவு 7.15 மணிக்கு இன்னிசை, 8.15 மணிக்கு சிறப்பு பரதநாட்டியம், 9 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    திருவிழா நாட்களில் தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு, சுவாமி வாகனத்தில் எழுந்தருளல், மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, சொல்லரங்கம் போன்றவை நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு தேரை வடம்தொட்டு இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தேர் நாலு ரத வீதிகளையும் சுற்றி வரும். 9.30 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு, 8.15 மணிக்கு இசை பட்டிமன்றம், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் ஆகியவை நடைபெறுகிறது.

    10-ம் நாள் திருவிழாவான வருகிற 22-ந் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு சுவாமி ஆராட்டுக்கு எழுந்தருளல், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு, 8.15 மணிக்கு நகைச்சுவை சிந்தனை பட்டிமன்றம், 9.30 மணிக்கு ஆராட்டுத்துறையில் இருந்து சுவாமி கோவிலுக்கு எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    நாகராஜா கோவில் தேரோட்ட விழாவன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக வருகிற பிப்ரவரி மாதம் 2-வது சனிக்கிழமை (9-ந் தேதி) குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாளாக இருக்கும். வருகிற 21-ந் தேதி குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக்கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×