search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேஷ வாகனத்தில் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியே வந்த போது எடுத்த படம்.
    X
    அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேஷ வாகனத்தில் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியே வந்த போது எடுத்த படம்.

    வைகுண்ட ஏகாதசி: காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது. கோவிந்தா...கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    மாதந்தோறும் வரும் ஏகாதசி நாட்களை விட மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி நாளானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதில் வைகுண்ட ஏகாதசி எனப்போற்றப்படும் இந்த நாளில் பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் வைணவ ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 8-ந் தேதி திருமொழி திருநாள் என்ற பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது.

    அரங்கநாத பெருமாளை போற்றி தினமும் 12 ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரதிவ்யபிரபந்த பாசுரங் களை நல்லான்சக்ரவர்த்தி சுவாமிகள், சுதர்சன பட்டர் சுவாமிகள் ஆகியோர் பெருமாள் முன்னிலையில் பாடினர்.

    வைகுண்ட ஏகாதசி நாளான நேற்று அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் அரங்கநாத சுவாமிக்கும், உற்சவர் அரங்கநாத பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாத பெருமாள் சேஷ வாகனத்தில் கோவில் உள்பிரகாரம் வலம் வந்து ஸ்ரீ ஆண்டாள் தாயார் சன்னதி முன் வீற்றிருந்தார். காலை 5.30 மணியளவில் அரங்கநாத பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டது. அதன் வழியே பெருமாள் வெளியே வந்தார். அப்போது கோவிந்தா...கோவிந்தா என பக்தர்கள் பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

    ஏற்கனவே சொர்க்கவாசல் வெளியே வீற்றிருந்த நம்மாழ்வார், ராமனு ஜர், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கும் பெருமாள் காட்சி தந்தார். பின்னர் பெருமாள் கோவில் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த அலங்காரபந்தலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சிகள் சுதர்சன பட்டர் சுவாமிகள், காரமடை ஊர்கவுடர் முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ, தாசப்பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் டி.டி.ஆறுமுகசாமி, ராஜகோபால் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து சொர்க்க வாசல் வீதி, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ரத வீதிகளில் 30-க்கும் மேற்பட்ட சமுதாய சங்கத்தினர், பொதுநல சங்கத்தினரால் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தல்களுக்கு பெருமாள் அழைத்து வரப்பட்டு, மண்டப கட்டளைகளை ஏற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஸ்ரீதேவி, பூதேவியுடன் நகர்வலம் வந்த அரங்கப்பெருமாளுக்கு பின்னால் தாசபளஞ்சிக மகாஜன சங்கம் மற்றும் சந்தான வேணுகோபால சுவாமி பஜனை குழுவினர் ஆடிப்பாடி வந்தனர்.

    இரவு 10.30 மணிக்கு இராப்பத்து நிகழ்ச்சி நடைபெற்றது. காரமடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான கா.விமலா, கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன், கோவில் கணக்கர் மகேந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர். வருகிற 25-ந் தேதி இரவு 8 மணியளவில் திருமங்கை மன்னன் வேடுபரி நிகழ்ச்சிக்காக அரங்கநாத பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். 27-ந் தேதி இரவு 8.30 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது.
    Next Story
    ×