search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்தங்கி சேவையை விசேஷமாக சொல்வது ஏன்?
    X

    முத்தங்கி சேவையை விசேஷமாக சொல்வது ஏன்?

    ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். ‘முத்தங்கி சேவை’ என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான்!
    ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பக்தர்களின் உற்சாக முழக்கங்கள், வாத்திய இசை எல்லாமாகக் கலந்து தெய்வீக லயத்தை எழுப்பும்.
    ரத்தின அங்கியில் தன் பேரெழில் துலங்குமாறு புறப்பட்டு வருவார் பெருமாள்.

    மார்கழி மாத ஏகாதசி ஆயிற்றே! எம்பெருமான் திருமேனி மீது பனி விழுமே! அதைத் தவிர்ப்பதற்காக துணிக் கூடாரம் பிடித்து வருகிறார்கள். வழியெங்கும் நிற்கும் அன்பர்களுக்கு அருள்பாலித்த அரங்கன், சேனை முதலியார் சன்னதிக்கு வந்து நிற்கிறார். அவரது திருவடியில் சமர்ப்பித்த மாலை, சேனை முதலியாருக்கு சாத்தப்படுகிறது.

    இதற்கு என்ன பொருள் தெரியுமா?


    அரங்கன் மீண்டும் மூலஸ்தானத்துக்கு எழுந்தருளும் வரை, அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கிறான். அதைத் தொடர்ந்து அரங்கனின் அழகு நடை ஆரம்பமாகிறது.

    நாழி கேட்டால் வாசல், கொடி மரம் கடந்து திரை மண்டபம் வந்து சேர்கிறார். அங்கே யஜூர் வேதத்தின் எட்டாம் பிரச்னம் சாற்று மறையாகிறது.

    அதைத் தொடர்ந்து மற்ற வேதங் களையும் சொல்கிறார்கள். வேதங்களை சுவாசமாகக் கொண்ட பகவான், பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்கு முன்பாக எழுந்தருளிவிட்டார். இதோ, ‘திற’ என்று அரங்கனின் ஆணை பிறக்கிறது. பரமபத வாசலின் மணிகள் ஒலிக்கின் றன. கதவுகள் திறந்து கொள்கின்றன.ரங்கா ரங்கா என்ற கோஷம் திசைகளை அதிர வைக்கிறது. பக்தவத்சலனான பரமன், தன் பக்தர்களோடு பரமபத வாசல் வழியே பிரவேசிக்கிறான்.

    அதிகாலை வேளையில் தன்னுடைய பக்தர்களுக்கு அருள் புரிதல் வேண்டும் என்ற கருணையின் வடிவாக வீற்றிருக்கிறான் அரங்கநாதன். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் பெறுகிறார்கள்.

    அரையர் சேவையோடு புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபம், தொடர்ந்து ஆஸ்தான மண்டபம் வந்து சேர்கிறான் பெருமான். மீண்டும் அரையர் சேவை நடைபெறும் அன்று நள்ளிரவு வரை ரங்கநாதர் இங்கே வீற்றிருப்பார். எப்போது யோக நித்திரையிலேயே காட்சி தருபவர், வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டும் ஓய்வில்லாமல் வீற்றிருந்து தரிசனம் அருள்வார். அதன் பிறகு மூலஸ்தானத்தை சென்று சேர்வார்.

    வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் தான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும். இந்த ஏகாதசி நாளிலும், அதையடுத்தும் மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். ‘முத்தங்கி சேவை’ என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான்!

    வைகுண்ட ஏகாதசி விழாவை ஸ்ரீரங்கத்தில் பார்த்தால், அதை ‘பூலோக வைகுண்டம்’ என்று சொன்னது எவ்வளவு நிஜம் என்பது புரியும். 
    Next Story
    ×