search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வைகுண்ட ஏகாதசி: திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்
    X

    வைகுண்ட ஏகாதசி: திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்

    18, 19-ந்தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும். இன்று (திங்கட்கிழமை) முதல் 19-ந்தேதி வரை கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 18-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிது. அன்று நள்ளிரவு 1.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருமலையில் நடந்தது.

    கூட்டத்தில் திருமலை- திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சீனிவாசராஜு கலந்து கொண்டு பேசினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 18-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 19-ந்தேதி வைகுண்ட துவாதசி விழா ஆகியவை நடக்கின்றன. அதையொட்டி 18-ந்தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. முதலில் குறைந்த எண்ணிக்கையில் மிக முக்கியமான வி.ஐ.பி. பக்தர்கள் புரோட்டோக்கால் தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் அதிகாலை 3 மணிவரை தரிசனம் செய்யலாம். புரோட்டோக்கால் பக்தர்களுக்கு, ‘லகு’ தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வி.ஐ.பி. பக்தருக்கு 4 முதல், 6 டிக்கெட் வரை வழங்கப்படுகின்றன. அந்த டிக்கெட்டின் விலை ஆயிரம் ரூபாய் ஆகும். எம்.பி, எம்.எல்.ஏ, எம்.எல்.சி மற்றும் நீதிபதிகள் ஆகியோருக்கு திருமலையில் ராம்ராஜு விடுதி அருகிலும், சீதா நிலையம் அருகிலும் தனியாகக் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    புரோட்டோக்கால் பக்தர்கள் வி.ஐ.பி. டிக்கெட் பெற வேண்டுமென்றால், நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த டிக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இன்று (திங்கட்கிழமை) முதல் 19-ந்தேதி வரை கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல் முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு ஆண்டு கைக்குழந்தையோடு வரும் பெண் பக்தர்கள், அங்கப்பிரதட்சணம் செய்வோர், திவ்ய தரிசனத்தில் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு நடைப்பாதைகளில் பாத யாத்திரையாக வருவோருக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை 5 மணியளவில் சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை வழிபட இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    18, 19-ந்தேதிகளில் ஏழுமலையானை வழிபட மொத்தம் 44 மணிநேரம் இலவச தரிசன பக்தர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 18, 19-ந்தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும். தேவஸ்தான ஊழியர்களுக்கு 2 நாட்களில் 24 மணிநேரமும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×