search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு திருப்பாவை பட்டில் ரெங்கமன்னாருடன் எழுந்தருளிய ஆண்டாள்.
    X
    மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு திருப்பாவை பட்டில் ரெங்கமன்னாருடன் எழுந்தருளிய ஆண்டாள்.

    மார்கழி மாதப்பிறப்பு: திருப்பாவை பட்டில் ஆண்டாள் தரிசனம்

    மார்கழி மாத பிறப்பினை முன்னிட்டு ஆண்டாள் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். இங்கு அவதரித்த ஆண்டாள் ஸ்ரீ ரங்கத்து பெருமானை நினைத்து மார்கழி நோன்பு இருந்து திருப்பாவை பாடல்கள் பாடி அவரையே கைத்தலம் பற்றினார். அந்த வகையில் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் சிறப்பாக கொண்டாடப்படும்.

    இதில் பச்சைபரத்தல், பகல் பத்து, ராப்பத்து உற்சவங்கள், வைகுண்ட ஏகாதசி, எண்ணெய் காப்பு உற்சவம் என இந்த மாதம் முழுவதும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மார்கழி மாத பிறப்பினை முன்னிட்டு ஆண்டாள் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

    பிற்பகல் 2.25 மணிக்கு ஆண்டாளுக்கு 30 திருப்பாவை பாடல்கள் இடம் பெறும் வகையில் நெய்யப்பட்ட 19 கஜ அரக்கு நிற திருப்பாவை பட்டுப்புடவை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை முத்து பட்டர், கிரிபட்டர், ஸ்தானிகம் ரங்கராஜன் ரமேஷ் ஆகியோர் நடத்தினர். மார்கழி மாத முதல் நாள் மட்டுமே ஆண்டாளுக்கு இந்த பட்டு சாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பாவை பட்டில் ரெங்கமன்னாருடன் தரிசனம் தந்த ஆண்டாளை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, தக்கார் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
    Next Story
    ×