search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவத்தின் 2-வது நாள்: பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்
    X

    ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவத்தின் 2-வது நாள்: பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல் பத்து உற்சவத்தின் 2-வது நாளில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவானது பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளன்று நம்பெருமாள் நீள் முடி கிரீடம் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    நேற்று பகல் பத்து திருமொழி உற்சவத்தின் 2-வது நாள் ஆகும். இதனையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். நம்பெருமாளுடன் ஆச்சாரியார், ஆழ்வார்களும் எழுந்தருளினார்கள். காலை 7.45 மணி முதல் மதியம் 1 மணி வரை அரையர்கள் நாலாயிரம் திவ்ய பிரபந்த பாடல்களில் 240 பாசுரங்களை அபிநயம் வியாக்யானத்துடன் பாடினார்கள். அப்போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளையும் ஆழ்வார்களையும் தரிசனம் செய்தனர்.

    மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அலங்காரம், அமுது செய்ய திரையிடப்பட்டது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை உபயகாரர்கள் மரியாதையுடன் மீண்டும் பக்தர்கள் பொதுஜன சேவைக்கு அனுமதிக்கப்பட்டனர். பகல் பத்து உற்சவத்தின் 2-வது நாளான நேற்று நம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் கஸ்தூரி திலகம், நவரத்தின காதுக்காப்புகள், வைர அபயஹஸ்தம், புஜ கீர்த்தி மார்பு கவசம், மகாலட்சுமி பதக்கம், தங்க காசுகள், முத்து, பவளமணி மாலைகள் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இரவு 7 மணிக்கு நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.

    வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வருகிற 18-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு நடக்கிறது. அப்போது நம்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள்வார். நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து சென்றால் சொர்க்கத்தை அடையலாம் என்பது ஐதீகமாகும். எனவே, இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    வருகிற 24-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 27-ந்தேதி தீர்த்தவாரியும், 28-ந்தேதி நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் செய்து உள்ளனர். 
    Next Story
    ×