search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொப்பரையில் வைப்பதற்காக ராட்சத திரியை கோவில் ஊழியர்கள் தூக்கிச்சென்ற காட்சி.
    X
    கொப்பரையில் வைப்பதற்காக ராட்சத திரியை கோவில் ஊழியர்கள் தூக்கிச்சென்ற காட்சி.

    மலைக்கோட்டை மலை உச்சி கொப்பரையில் திரி வைக்கும் பணி தொடங்கியது

    திருச்சி மலைக்கோட்டை கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மலை உச்சியில் உள்ள கொப்பரையில் திரி வைக்கும் பணி தொடங்கி உள்ளது.
    கார்த்திகை தீப திருவிழா வருகிற 23-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தென்கயிலாயம் என அழைக்கப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். மலைக்கோட்டையின் கீழ்ப்பகுதியில் மாணிக்கவிநாயகர் சன்னதியும், மலையின் நடுப்பகுதியில் தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மை சன்னதியும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும் அமைந்துள்ளன.

    மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக கோபுரம் அமைக்கப்பட்டு அதில் பிரமாண்ட செப்பு கொப்பரை வைக்கப்பட்டுள்ளது. இதில் தான் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தாயுமானசுவாமி கோவிலில் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீப திருவிழாவுக்கான பூர்வாங்க பூஜை கடந்த 11-ந்தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து கொப்பரையில் திரி வைப்பதற்கும், எண்ணெய் ஊற்றவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பருத்தி துணியில் 300 மீட்டர் நீளத்தில் திரியும், இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவை மொத்தம் 900 லிட்டரும் ஏற்பாடு செய்யப்பட்டன. திரியை கொப்பரையில் வைக்கும் பணி நேற்று மாலை தொடங்கியது.

    கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் கோபுரத்தில் உள்ள கொப்பரையில் திரி வைக்கும் பணி நடந்த போது எடுத்த படம்.


    திரியை பகுதி, பகுதியாக பணியாளர்கள் மலை உச்சிக்கு எடுத்துவந்தனர். கோபுரத்தின் மேலே உள்ள கொப்பரைக்கு திரியை கயிறு கட்டி பணியாளர்கள் இழுத்தனர். சிலர் கொப்பரையின் மேல் நின்று அந்த திரியை அதில் வைத்தனர். முதலில் ஒரு பகுதி திரி மட்டும் வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் ஊற்றும் பணி நடந்தது. தொடர்ந்து கொப்பரையில் மற்ற பகுதிகளில் திரி வைக்கப்பட்டு, எண்ணெய் ஊற்றப்படும். இந்த பணி முழுமையாக முடிவடைய ஓரிரு நாட்கள் ஆகும்.

    எண்ணெய் முழுவதுமாக ஊற்றப்பட்ட பின் திரி அதில் நன்கு ஊறிவிடும். வருகிற 23-ந்தேதி கார்த்திகை தீப திருவிழா அன்று மாலை 6 மணிக்கு கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் அணையாமல் தொடர்ந்து 3 நாட்கள் எரியும்.

    கார்த்திகை தீப திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×