search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா 17-ந்தேதி தொடக்கம்
    X

    பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா 17-ந்தேதி தொடக்கம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா வருகிற 17-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தண்டாயுதபாணியாக விளங்கும் முருகப்பெருமான் சரவணப்பொய்கையில் ஆறு செந்தாமரை மலர்களில் 6 குழந்தையாய் தவழ்ந்தபோது கார்த்திகை பெண்களால் சீராட்டி, பாலூட்டி வளர்க்கப்பட்டதால் முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் என பெயர் வந்தது.

    முருகப்பெருமானின் அவதார சிறப்பை விளக்கும் கார்த்திகை தீப திருவிழா வருகிற 17-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை மலைக்கோவிலில், சாயரட்சை பூஜையில் காப்புகட்டு நடக்கிறது. தொடர்ந்து சன்னதியில் உள்ள விநாயகர், சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரர், துவாரபாலகர்கள் ஆகியோருக்கும், மயில்வாகனம் மற்றும் கொடிமரத்துக்கும் காப்புகட்டு நடைபெறும்.

    7 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் தினமும் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.45 மணிக்கு சின்னக்குமாரர், தங்க சப்பரத்தில் புறப்பாடும், இரவு 7 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 7.30 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். வருகிற 22-ந்தேதி நடக்கும் சாயரட்சை பூஜையில் யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டுவரப்பட்டு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.

    வருகிற 23-ந்தேதி திருக்கார்த்திகையையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பும், உடன் விஸ்வரூப தரிசனமும், நடக்கிறது. பின்னர் காலை 6.40 மணிக்கு விளா பூஜையும், 8 மணிக்கு சிறுகாலசந்தி, 9 மணிக்கு காலசந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், 2 மணிக்கு சண்முகார்ச்சனை, தீபாராதனையும், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும், 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றுதலும், மாலை 6 மணிக்கு மலைக்கோவில் மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தீபஸ்தம்பத்தில் தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். அதைத்தொடர்ந்து திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில்களில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×