search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமான் மயில் சேவையாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    X
    வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமான் மயில் சேவையாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் தனது தாயாரிடம் இன்று சக்திவேல் வாங்குகிறார்

    திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் தனது தாயாரிடமிருந்து இன்று சக்திவேலை வாங்குகிறார்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி சண்முகர் சன்னதியில் தெய்வானை, வள்ளி சமேத சண்முகப் பெருமானுக்கு தினமும் 2 வேளை தலா 2 மணிநேரம் சண்முகார்ச்சனை நடைபெறுவது தனி சிறப்பு. சண்முகருக்கு (ஆறுமுகத்திற்கும்) 6 வகை சாத படையல் படைத்து சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று மயில் சேவையாக வள்ளி, தெய்வானையுடன் சண்முகப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) கோவிலில் உள்ள ஆலய பணியாளர்கள் திருக்கண்ணில் இரவு 7 மணிக்கு வேல் வாங்குதல், நடக்கிறது. இதில் சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் தனது தாயாரான கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து சக்திவேல் வாங்கு கிறார்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு மாலை 6 மணிக்கு சூரசம்ஹார லீலை நடக்கிறது. இதையொட்டி அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள்.

    திருவிழாவின் முத்தாய்ப்பாக நாளை மறுநாள் காலை 8 மணிக்கு சட்டத் தேர் பவனி நடக்கிறது. இதில் தெய்வானையுடன் முருகப் பெருமான் சட்டத் தேரில் எழுந்தருளுகிறார். காப்பு கட்டி விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சட்டத் தேரை வடம் பிடித்து இழுத்து கிரிவலம் வந்து சாமிதரிசனம் செய்கிறார்கள்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தில் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். இதே போல கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளில் மாலை 4 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை முருகப் பெருமானுக்கு தங்க கவசம் சாற்றப்படும். ஆகவே ஆண்டிற்கு 2 முறை கருவறையில் முருகப்பெருமானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு வருகிறது. இதேபோல இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான வருகிற 14-ந் தேதி மாலை 4 மணிக்கு முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது. மேலும் கோவிலின் கருவறையில் கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், சத்தியகிரீஸ்வரருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்படுகிறது.

    முருகப் பெருமான் சூரனை வதம் செய்த உக்ரத்தில் (கோபம்) இருந்து தணிவதற்காக 100 படி அரிசியில் சாதம் படைத்து அதில் சுமார் 15 லிட்டர் தயிர் கலந்து படைக்கப்படுகிறது. இதை பாவாடை தரிசனம் என்று அழைக்கிறார்கள். இத்தகைய நிகழ்ச்சி ஆண்டிற்கு ஒரு முறை கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நாளில் மாலை 4 மணிக்கு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×