search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாளவாடி அருகே கும்டாபுரத்தில் நடந்த திருவிழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சாணியை அள்ளி வீசிய காட்சி.
    X
    தாளவாடி அருகே கும்டாபுரத்தில் நடந்த திருவிழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சாணியை அள்ளி வீசிய காட்சி.

    கும்டாபுரம் பீரேஸ்வரர் கோவிலில் சாணியடி திருவிழா

    தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் பீரேஸ்வரர் கோவிலில் நடந்த சாணியடி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ளது கும்டாபுரம் மலைக்கிராமம். இங்கு பீரேஸ்வரர் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஆண்டுதோறும் சாணியடி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்த 3-வது நாள் இந்த சாணியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கும்டாபுரம் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வரும் மாடுகளின் சாணத்தை சேகரித்து கோவிலின் பின்னால் குவித்து வைத்தனர். நேற்று காலை கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

    அதைத்தொடர்ந்து சாமி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஊர்க்குளத்துக்கு பூசாரி தலைமையில் பக்தர்கள் சென்றனர். அங்கிருந்து ஒரு கழுதை மீது வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அங்கிருந்து கோவிலுக்கு பின்புறம் சென்ற பூசாரி, அங்கு குவிக்கப்பட்டு இருந்த சாணத்துக்கும் சிறப்பு பூஜை செய்தார்.

    அதைத்தொடர்ந்து சாணியடி திருவிழா தொடங்கியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குவித்து வைத்திருந்த சாணியை கைகளில் எடுத்து உருட்டி சிறு உருண்டைகளாக செய்து ஒருவர் மற்றவர் மீது வீசினார்கள். குவித்திருந்த சாணம் முடியும் வரை இவ்வாறு சாணியை அடித்து உற்சாகமாக கொண்டாடினார்கள். அப்போது கூடி இருந்த பெண்கள் கைகளை தட்டி சாணி எறியும் பக்தர்களை உற்சாகப்படுத்தினார்கள். பின்னர் பக்தர்கள் குளத்தில் நீராடிவிட்டு மீண்டும் கோவிலுக்கு வந்து பீரேஸ்வர சாமியை வழிபட்டனர்.

    இந்த விழாவில் கும்டாபுரம் மட்டுமின்றி தாளவாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் ஏராளமாக பங்கேற்று சாணிஅடித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். சாணியடி விழா முடிந்ததும் ஆங்காங்கே சிதறிக்கிடந்த சாணிகளை அக்கம்பக்கத்தில் உள்ள விவசாயிகள் சேகரித்து தங்கள் விவசாய நிலங்களுக்கு கொண்டு சென்றனர்.

    விழாவையொட்டி கும்டாபுரம் கிராமமே விழாக்கோலம் பூண்டு, மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடியது.
    Next Story
    ×