search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீபாவளியன்று பித்ரு வழிபாடு செய்யுங்கள்
    X

    தீபாவளியன்று பித்ரு வழிபாடு செய்யுங்கள்

    ஐப்பசி மாத சதுர்த்தசியான தீபாவளித் திருநாள், பித்ருக்கள் எனப்படும் முன்னோர் வழீபாட்டுக்கு உகந்த நாள். பித்ருக்களை வழிபடுவதால், நம் பாவங்கள் தொலைவதுடன், குலம் செழிக்கும் என்கின்றன புராணங்கள்.
    ஐப்பசி மாத சதுர்த்தசியான தீபாவளித் திருநாள், பித்ருக்கள் எனப்படும் முன்னோர் வழீபாட்டுக்கு உகந்த நாள். பித்ருக்களை வழிபடுவதால், நம் பாவங்கள்தொலைவதுடன், குலம் செழிக்கும் என்கின்றன புராணங்கள்.

    பித்ரு வழிபாட்டை வலியுறுத்தும் புராணக் கதை ஒன்று.

    கிருத யுகம்! மகரிஷி ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர் மனைவி, குழந்தையின் முகத்தைப் பார்ப்பதற்கு முன்பே இறந்து போனாள். தாயைப் பறிகொடுத்து நிற்கும் குழந்தையை மிகுந்த அன்புடன் வளர்த்து வந்தார் மகரிஷி.

    ‘மறுமணம் செய்து கொண்டால், குழந்தையிடம் தான் காட்டும் மாசம் குறைந்து விடுமோ?’ என்று அஞ்சிய மகரிஷி மறுமணம் செய்து கொள்ளாமல், தன் மகனைக் கண்ணைப் போல் பாதுகாத்து வளர்த்து வந்தார். அனைத்துக் கல்வியையும் அவனுக்கு போதித்தார்.

    காலங்கள் ஓடின. முதுமை அடைந்த மகரிஷி ஒரு நாள் முக்தி அடைந்தார். தந்தையின் பிரிவால் தவித்த மகன், தந்தையின் உயிரைப் பறித்த எமனையும், அவனது உலகையும் அழிக்கும் நோக்குடன் கடும் தவம் மேற்கொண்டான். இவனது தவம், எமனின் தந்தையான சூரிய பகவானைத் தாக்கியது. தவத்துக்கான காரணத்தை அறிந்து அவனுக்கு முன்னே தோன்றிய சூரிய பகவான், “மனிதராகப் பிறந்தால் மரணம் நிச்சயம் இதுவே விதி” என்று விளக்கினார்.

    ஆனால் சூரிய பகவானது விளக்கத்தை அவனது மனம் ஏற்கவில்லை. மாறாக... சூரியனுக்கும் எமனுக்கும் சாபம் கொடுக்க முனைந்தான். அப்போது பித்ரு உலகத்தில் உள்ள தேவதைகள் அங்கே தோன்றினர். கோபத்தை கைவிடும்படி அவனிடம் அறிவுறுத்தினர். அப்போதும் அவனது கோபம் குறையவே இல்லை. இறுதியாக, “உன் தந்தையை ஒரேயரு முறை உன் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறோம்” என்று அந்த தேவதைகள் சொன்னதும் அவனது கோபம் தணிந்தது. சமாதானம் அடைந்தான்.

    இதையடுத்து, பித்ரு தேவதைகள் தங்களது சக்தியால், முக்தியடைந்த மகரிஷியை அவனுக்கு முன்னே தோன்றச் செய்தனர். உணர்ச்சிப் பெருக்கில் அழுதபடி தந்தையை நமஸ்கரித்தான் மகன். “பித்ரு லோகத்துக்குச் சென்ற பின், இந்தப் பூலோகத்துக்கு வர இயலாது என்பதை புரிந்து கொள்” என்று விளக்கிய மகரிஷி, “உனக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்டார்.

    “தாயற்ற என்னை அன்புடன் வளர்த்து ஆளாக்கி, கல்வியும் போதித்தீர்கள். ஆனால் தங்களிடம் ‘சாப்பிட்டீர்களா? என்று ஒரு நாள்கூட நான் கேட்கவே இல்லை. இதோ... இந்தப் பழங்களையாவது சாப்பிடுங்கள்” என்று தந்தையிடம் கொடுத்தான். பித்ரு தேவதைகளது சம்மதத்துடன், மகன் அளித்த பழங்களை வாங்கிச் சாப்பிட்டார் மகரிஷி. இதன் பின்னரே அவன் சாந்தம் அடைந்தான்.

    சூரியனும், பித்ரு தேவகைளும் அவனுக்கு ஆறுதல் கூறினர். “முக்தி அடைந்த நாளன்று, வருடந்தோறும் உன்னுடைய தந்தை, பித்ருவாக உன்னைத் தேடி இனி வருவார். நீ அளிக்கும் படையலை ஏற்றுக் கொண்டு பித்ரு லோகத்துக்கு திரும்புவார். மேலும், உன் தந்தை முக்தியடைந்த புரட்டாசி மாதம், இனி பித்ருக்களின் மாதம் என்று போற்றப்படும். இந்த நாளில் தங்களது பித்ருக்களுக்கு அனைவரும் பொது சிராத்தம் செய்வது புனிதமாகும்” உன்று வரம் அருளிச் சென்றனர்.

    இதனால்தான் பித்ரு வழிபாடு சிறப்புக்கு உரியதாகப் போற்றப்படுகிறது. மகாளயபட்ச நாட்களில் பித்ரு உலகத்திலிருந்து வெளிவரும் முன்னோர்கள் ஐப்பசி அமாவாசை வரை பூலோகத்திலிருந்து நாம் தரும் தர்ப்பணம் மற்றும் பூஜைகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    தீபாவளித் திருநாளன்று, நாம் செய்யும் பூஜையையும், படையலையும் பித்ருக்கள் சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டு, நம்மை ஆசீர்வதித்து, பின்னர் அவர்களது உலகுக்குத் திரும்புகின்றனர் என்பது ஐதீகம். ஆகவே தீபாவளித் திருநாளில் பித்ருக்களை அவசியம் வழிபட வேண்டும். இதனால் மறைந்த நம் முன்னோர்களின் ஆசி நமக்கு நிரம்ப கிடைக்கும்.

    Next Story
    ×