search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீபாவளி சார்ந்த நம்பிக்கைகள்
    X

    தீபாவளி சார்ந்த நம்பிக்கைகள்

    இந்தியா முழுவதும் பண்டிகைகள் என்பது கொண்டாடப்படும் போது நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
    இந்தியா முழுவதும் பண்டிகைகள் என்பது கொண்டாடப்படும் போது நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பூஜைகளும் பண்டிகைகளும் கொண்டாட்ட மகிழ்ச்சியை தரும் என்பதுடன் நமது வாழ்வின் வளங்கள் பன்மடங்கு பெருகுவதற்கும், ஆரோக்கியத்தை பெறுவதற்குமான முயற்சிகள்தான். சமய சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் என்பது பெரும்பாலும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களால் தான் அதிகமாக செயல்படுத்தப்படுகிறது. இறை நம்பிக்கை என்பதுடன், தொடர்ந்து வாழ்வை நகர்த்த மேம்பட்ட முயற்சியாகவும்தான் கொள்ள வேண்டும்.

    அது போல் தீபாவளி பண்டிகை சமயத்திலும் சில சமய சடங்குகள் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தீபாவளி சமயத்தில் செய்யப்படும் இந்த தீர்வுக்கான முயற்சிகள் என்பது ஓம் வரைவது, சங்கு ஒலிக்க செய்வது, விநாயகர் - லட்சுமி மந்திரங்கள், கரும்பு வேர் வணங்குவது, தாமரை மலரால் பூஜை செய்வது போன்றவாறு உள்ளன. இவற்றை தீபாவளி சமயத்தில் செய்யும் போது நமது வறுமை நிலை ஒழிந்து செல்வ நிலை மேம்பாடு அடையும் என்பதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாக தீபாவளி பூஜையோடு இந்த நம்பிக்கை சார்ந்த விஷயங்களை மேற்கொள்ளும் பழக்கம் பலரிடமும் இருந்து வருகிறது.

    நற்பலன் தரும் ஓம் வரைதல்

    தீபாவளிக்கு முதல் நாள் தந்தராஸ் பூஜை மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக இந்த விஷயத்தை செய்து விடுவர். அதாவது வீட்டின் வாசல் நுழைவு பகுதியில் அழகிய ஓம் எனும் எழுத்தை எழுதுவது பச்சரிசி மாவு மற்றும் மஞ்சள் கலந்து ஓம் எனும் பிரணவ எழுத்தை எழுதிட வேண்டும். இதன் மூலம் வீட்டிற்கு செல்வ வளம் விரைவாக வந்து விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனை எழுத அதிகம் செலவாகாது. இதனை பலரும் வீட்டின் முன் தந்தராஸ் நாளில் வரைந்து இருப்பர்.

    சங்கு ஒலிக்கச் செய்தல்:

    தீபாவளி நாளில் வீட்டில் மங்கல ஓசை எழுப்புவது நல்ல வளங்களை கொண்டு வருமாம். அந்த வகையில் வீட்டில் சங்கு வைத்திருப்பதே சிறந்த பலனை தரும். அந்த சங்கை தீபாவளி நாளில் அதிக ஒலியுடன் ஊத செய்வது வேண்டுமாம். பண்டிகையின் போது இந்து குடும்பங்களில் பலர் சங்கு ஊதி இறைவனை வணங்குவர். அதுபோல் தீபாவளி அன்று சங்கு ஒலிப்பதன் மூலம் வீட்டிற்கு நல் வளத்தையும் செல்வத்தையும் அழைத்து வர முடியுமாம். அப்படி வீட்டில் சங்கு இல்லாதவர்கள் தீபாவளி நாளில் புதியதாக வாங்கி வந்து பூஜையறையில் வைத்து வழிபட்டு வரலாம். அப்படியில்லையெனில் சங்கு பூஜை செய்து வழிபாடு நடத்தலாம்.

    இறையருள் தரும் கரும்பு வழிபாடு:


    விநாயகர் மற்றும் லட்சுமி பூஜை செய்யும் நபர்கள் அதனுடன் வேருடன் கூடிய கரும்பை வைத்தும் வழிபாடு செய்வர். தீபாவளி நாளில் கரும்பை வைத்து பூஜை செய்து வழிபடுவதன் மூலம் இல்லத்தில் நலன் அதிகரிப்பதுடன், செல்வ வளம் பெருகுமாம். கரும்பு விவசாயிகளின் நல்வருவாய் மற்றும் இனிப்பான சுவை மிகுந்தது என்பதால் இதனை பூஜையில் வைத்து வழிபடுகின்றனர்.

    தாமரை மலர்களால் அர்ச்சனை:

    மகாலட்சுமியின் விருப்பமான மலர் தாமரை. எனவே தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வதற்கு தாமரை மலர்களால் லட்சுமியை அலங்கரிப்பதுடன், தாமரை மலரால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம். தாமரை மலர் மாலை அணிவித்து லட்சுமி மந்திரம் ஜெபித்து மகாலட்சுமியை வணங்க அவள் நமக்கு லட்சுமி கடாட்சத்தை வழங்கி விடுவாள்.

    அதுபோல் தீபாவளி நேரத்தில் வீட்டில் லட்சுமி கணபதி மந்திரங்களை வைத்து பூஜை செய்திட ஐஸ்வர்யம் பெருகும். தீபாவளி சமயத்தில் ஒவ்வொரு பிராந்திய மக்களும் தங்களுக்கென சில வழிபாட்டு முறைகள், சமய சடங்குகளை செய்து வருகின்றனர். இவற்றில் நமக்கு எது விருப்பமானதோ அதனை செயல்படுத்துவது தீபாவளி கொண்டாட்டத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்புவோம்.
    Next Story
    ×