search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீபம் தானம் செய்யுங்கள்
    X

    தீபம் தானம் செய்யுங்கள்

    தீப தானத்தை சூரிய உதயத்திற்கு முன்பே தர வேண்டும் என்ற நியதி பின்பற்றப்பட்டு வந்தது. எமன் இந்த தீப தானத்தினால் மிகவும் திருப்தி அடைகிறான் என்று சொல்லப்படுகிறது.
    லட்சுமி தேவியே தீப மங்கள ஜோதியாக விளங்குபவள். இல்லங்களை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொண்டு அந்தி மயங்கியதும் தீபம் ஏற்றி தெய்வத்தை தொழுவதால் லட்சுமி விஜயம் செய்வாள்.

    தங்களையும் அழகு செய்து கொண்டு, கொல்லைக் கதவை அடைத்து வாசல்கதவை திறந்து வைத்து, விளக்கைத் துடைத்து குங்குமம் இட்டு மலர் சூட்டி, அழகு செய்து, குத்துவிளக்கை ஏற்றி தூய உள்ளத்துடன் தொழும்போது அந்த தீபச் சுடரிலே ஊரூராக வீடு வீடாக சுற்றிப்பார்த்து வரும் மகாலட்சுமியின் சுடர்மேனியை தரிசித்து பேறு பெறலாம் என்பர்.

    விளக்கே லட்சுமியின் உருவாகும். விளக்கை ஏற்றாமல் எந்த பூஜையையும், சுப காரியத்தையும் நாம் செய்வதில்லை. தீபம் இருளை விரட்டி ஒளியை பரப்புகிறது. குத்துவிளக்குகளில் சாதாரணமாக ஐந்து முகங்கள் உண்டு. இந்த ஐந்தையும் திரிபோட்டு ஏற்றினால் மங்களகரமாக விளங்குகிறது.

    குத்துவிளக்கு திருமணமான பெண்களுக்கு அளிக்கப்படும் சீர்வரிசைகளில் முக்கியமானதாகும். இந்த ஐந்து முகங்களும் பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐநது முக்கிய குணங்களை நினைவூட்டுகிறது என்பார்கள். அவை அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோகித புத்தி, சகிப்புத்தன்மை.

    அம்பிகையை பூஜிக்கும் போது தீபத்தில் ஆவாகனம் செய்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அப்படி தீபத்தில் அம்பிகையை ஆவாகனம் செய்யும் போது சாட்சி தீபம் என்று மற்றொரு தீபம் இருக்க வேண்டும். குத்துவிளக்குகள் லட்சுமி சொரூபம். இரவில் குத்துவிளக்கை அணைக்கும் முன் அதற்கு பால்தொட்டு வைத்து பின்னரே அணைப்பது வழக்கம். எந்த தெய்வ வழிபாடும் குத்துவிளக்கு இல்லாமல் செய்வதில்லை.

    குத்துவிளக்கு திரிமூர்த்தி சொரூபம் எனவும் கூறப்படுகிறது. ஆசனமாகிய அடிப்பாகம் பிரம்ம சொரூபம். நடுத்தண்டாகிய மத்திய பாகம் விஷ்ணு, நெய் ஏந்தும் அகல் பகுதி சிவன். அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன். சிகரமாக உள்ள உச்சப் பகுதி சதாசிவன்.

    நெய்-நாதம், திரி-பிந்து, சுடர்-திருமகள், தீப்பிழம்பு-கலைமகள், தீ-சக்தி.

    இந்த விளக்கு நம் உடலிலும் இருக்கிறது. அடிப்பாகம் நாபிக்குக் கீழ் உள்ள மூலாதாரம். மேல்நோக்கி ஓடும் சுசூம்னா நாடியே விளக்கின் தண்டு. கழுத்துக்கு மேற்பட்ட பகுதியே குத்துவிளக்கின் தலைப்பாகம். புருவ மத்தியில் ஜோதி ஜோலிப்பதே குத்துவிளக்கின் சுவாலை. ஆத்ம ஜோதியை வணங்குவதே தீப பூஜையின் தத்துவம்.

    தமிழர்கள் விளக்கையை தெய்வமாகக் கொண்டனர். இருட்டில் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது என்பது தமிழர்களின் கொள்கை. 8 மங்கள பொருட்களின் ஒன்றாக விளக்கையும் சேர்த்தார்கள்.

    திருமணமாகி புதுக் குடித்தனம் செய்ய போகும் பெண்ணுக்கு அளிக்கும் சீர்வரிசைகளில் குத்துவிளக்கு முதலிடம் பெறுகிறது. சில திருமண சடங்குகளில் ஏற்றி வைத்த குத்துவிளக்கை மணமக்கள் வலம் வருவது உண்டு. ஊஞ்சலில் மணமக்கள் மனமகிழ உட்கார வைத்து தீபத்தை எடுத்துக் கொண்டு சுமங்கலிகள் சுற்றி வருவதைக் கவனித்திருக்கலாம்.

    ஆலயங்களில் விளக்கு ஏற்றுவது மாபெரும் புண்ணியம். பண்டைக் காலத்தில் நம் முன்னோர்கள் கோவில்களில் விளக்கு எரிய காணிக்கை அளித்ததுடன் அந்த விளக்கினை எரிய நெய் இடுவதற்காக பல நிவந்தங்களும் ஏற்படுத்தி இருந்தனர்.

    குலோகத்துங்க சோழன் ஆட்சியில் ஒரு வேடன் தவறுதலாக ஒரு மனிதனைக் கொன்றுவிட்டான். அந்த கொலை குற்றத்துக்காக அவனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராத தொகையை கொண்டு கோவிலில் எப்போதும் அணையாத விளக்கு ஏற்றி வைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இறந்துபோனவனின் ஆவியினால் கொலை செய்தவனுக்கு ஏற்படும் தீங்குகளில் இருந்து அவனைக் காக்க இத்தகைய வழி கண்டு பிடிக்கப்பட்டது.

    ராஜராஜசோழன் பிருகதீஸ்வரர் கோவிலில் நாள் தோறும் நெய் விளக்கு ஏற்ற நாள் ஒன்றுக்கு இவ்வளவு நெய் அளிக்க வேண்டும் என்று ஏராளமான பசுக்களை மானியமாக அளித்தான். இந்த மாதிரி பல மன்னர்கள், பிரபுக்கள் நிவந்தம் ஏற்படுத்தி உள்ளனர். லட்சுமி தீபத்தில் பூஜை செய்வது வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். செவ்வாய்க்கிழமைகளில் செய்வது மங்களகவுரி விரதம் எனப்படும். இதை அங்கார வார விரதம் என்றும் சொல்வார்கள்.

    தீபத்திற்கான திருவிழாக்களில் முதன்மையானது தீபாவளி. தீப ஆவலி (தீபவரிசை) தான் தீபாவளியாகி விட்டது. நரகாசூரன் கொடுமை என்ற இருள் உலகில் சூழ்ந்த போது கண்ணன் என்ற ஒளி பிரகாசித்தது. அதைக் கொண்டாடுவதே தீபாவளி என்று வடநாட்டில் தீபாவளி அன்று தீபங்களை ஏற்றி வரிசையாக வைக்கிறார்கள்.

    இந்த விழாக்களில் விளக்கு ஏற்றுவது பெரிதல்ல. அவைகளை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளக்கு அணைவது தீய சகுனம், விளக்கில் இருந்து பொறி உதிர்ந்தால் இறை அருள் நிச்சயம் என்ற அர்த்தம். சாப்பிடும் போது விளக்கு அணைந்தால் அத்துடன் எழுந்துவிடுவது முற்கால வழக்கம். ஆதிசங்கரர் சிறுவனாக இருந்த போது ஆற்றுக்குச் சென்றார். அப்போது ராக்காலம் அவருடைய காலை ஒரு முதலை பிடித்துக் கொண்டது. அப்போது ''என் தாயாரிடம் சொல்லிவிட்டு வருகிறேன்'' என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு சங்கரர் அன்னையிடம் வந்து நடந்ததைக் கூறினார். சங்கரர் ஆற்றிற்குத் திரும்பிய போது அவர் அன்னை ஒரு எரிகிற விளக்கை மரக்காலுக்குள் மறைத்துக் கொண்டு வந்தாள்.

    முதலை சங்கரரின் காலைப் பிடித்து உண்ண ஆரம்பித்தது. பின்னால் நின்ற அன்னை மூடியிருந்த விளக்கை திடீரென்று வெளியே காட்டி உடனே அணைத்துவிட்டாள். தீய சகுனம் ஏற்பட்டு விட்டதால் முதலை அவரை உண்ணாமல் விட்டது. சங்கரர் உயிர் தப்பினார். ஆறு அறிவு இல்லாத பிராணிகள் கூட தர்மத்திற்கு கட்டுப்பட்டிருந்த காலம் அது.

    பண்டைக்கால விளக்குகளில் இத்தீபங்களை வைக்கவே தனிமாடங்கள் அமைக்கப்படும். வாயிற்படியின் இருபுறங்களில் இந்த தீப மாடங்கள் கட்டாயம் இருக்கும். கிராமப்புறங்களில் பசு மாடுகள் மேய்ந்துவிட்டு சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் வீடு திரும்பும். பசு லட்சுமி சொரூபமானதால் அவை வருவதற்கு முன்பே தீபம் ஏற்றிவிடுவது வழக்கம்.

    இந்த விளக்குகளில் தான் எவ்வளவு வேலைப்பாடுகள், ஹம்சம், கிளி, மயில், இவைகளை எல்லாம் விளக்கின்மேல் அமைத்து அபூர்வ வேலைப்பாடுகளுடன் விளங்கும். மொகலாய சக்கரவர்த்தி அக்பர் ஒவ்வொரு விளக்குமே தெய்வீக ஒளியின் அம்சம் என்று கருதினார். வேத காலத்தில் அக்னி எப்போதுமே அணையாது பாதுகாக்கப்படும். அணையாமல் அதை காப்பது குடும்பத் தலைவியின் முக்கிய கடமைகளில் ஒன்று.

    அக்பர் தன் அரண்மனையில் இந்த வேதகால வழக்கத்தைப் பின்பற்றி அக்னியை அணையாமல் காத்துவர ஏற்பாடு செய்தார் என்று அபூ பைசல் எழுதிய ''அயீன் அக்பரி'' கூறுகிறது. ஏற்றிய தீபத்தை தானம் அளிப்பது பத்துவித முக்கிய தானங்களில் ஒன்றாகும். இறந்தவர்களின் ஆவி நற்கதி அடைய இந்த தானம் கொடுக்கப்பட்ட விளக்கின் ஒளி வெளிச்சம் காட்டுகிறதாம்.

    முன் காலத்தில் இந்த தீப தானத்தை சூரிய உதயத்திற்கு முன்பே தர வேண்டும் என்ற நியதி பின்பற்றப்பட்டு வந்தது. எமன் இந்த தீப தானத்தினால் மிகவும் திருப்தி அடைகிறான் என்று சொல்லப்படுகிறது. தென்னிந்தியாவில் 16 வித தீப தானங்கள் இருந்ததாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. பனை ஓலையில் படகு மாதிரி செய்து அதில் தீபம் ஏற்றி தானம் செய்வது.

    அதில் ஒரு முறை, கங்கைக்கரையில் தீப தானம் அளிப்பது மிகவும் விசேஷம். கங்கையில் அகலில் தீபத்தை ஏற்றி அதை மிதக்க விடுவது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. தீபத்தை எடுத்துக் கொண்டு பிரதட்சணம் வருவதில் பெரும் புண்ணியம் உண்டு. கன்னிப்பெண்கள் இப்படி தீபத்துடன் பிரதட்சணம் செய்தால் அவர்களுக்கு சீக்கிரமே திருமணம் நடைபெறும். தபோவனம் ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் மடத்தில் இந்த வழக்கம் தினமும் பின்பற்றப்பட்டு வருகிறது.
    Next Story
    ×