search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம், சோலைமலையில் கந்த சஷ்டி திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது
    X

    திருப்பரங்குன்றம், சோலைமலையில் கந்த சஷ்டி திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது

    திருப்பரங்குன்றம் மற்றும் சோலைமலை முருகன் கோவில்களில் வருகிற 8-ந்தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கி 7 நாட்கள் நடைபெற உள்ளது.
    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 8-ந்தேதி(வியாழக்கிழமை) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது.

    திருவிழாவையொட்டி 8-ந்தேதி உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமிக்கும், சண்முகர் சன்னதியில் தெய்வானை மற்றும் வள்ளி சமேத சண்முகருக்கும் காப்பு கட்டுதல் நடக்கிறது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது கரங்களில் காப்பு கட்டி கடும் விரதம் தொடங்குவார்கள். திருவிழாவையொட்டி தினமும் 2 வேளை சண்முகார்ச்சனையும், ஒரு வேளை யாகசாலையும், தினமும் இரவு 7 மணி அளவில் கோவிலுக்குள் திருவாட்சி மண்டபத்தை 6 முறை சாமி வலம் வருதலும் நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12-ந்தேதி இரவு 7 மணி அளவில் கோவிலுக்குள் பணியாளர் திருக்கண்ணில் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து சக்திவேல் பெற்று கம்பத்தடி மண்டபத்தில் உள்ள நந்தியை வலம் வந்து பணியாளர் திருக்கண்ணில் எழுந்தருளும் சத்திய கீரிசுவரர் முன்னிலையில் சுப்பிரமணியசாமியின் திருக்கரத்தில் சக்திவேல் சமர்ப்பிக்கப்படும். திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக 13-ந்தேதி மாலை 6 மணி அளவில் சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்ஹார லீலை நடக்கிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 14-ந்தேதி காலை கிரிவல பாதையில் சட்டத்தேர் பவனியும், மாலை பாவாடை தரிசனமாக தங்க கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தங்கமயில் வாகனத்துடன் சட்டத்தேரில் எழுந்தருளும் சுப்பிரமணியசாமி கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சட்டத்தேரின் வடம் பிடித்து 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலத்தை வலம் வந்து தேரினை நிலைநிறுத்துவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    இதேபோன்று அழகர்மலை உச்சியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலையிலும் 8-ந்தேதி கந்த சஷ்டி திருவிழா விக்னேசுவரர் பூஜையுடன் தொடங்குகிறது. 13-ந்தேதி சூரசம்ஹார நிகழ்ச்சியும், 14-ந்தேதி திருக்கல்யாணம் உற்சவமும் நடைபெறுகிறது. முன்னதாக திருவிழாவின் ஒவ்வொரு நாளும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் தீபாவளி பண்டிகை முடிந்து 2 நாட்கள் கழித்து 8-ந்தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கி 14-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ள நிலையில், 15-ந்தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 24-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. முருகன் கோவிலில் 2 திருவிழாக்கள் 17 நாட்கள் தொடர் திருவிழாவாக நடப்பது விசேஷத்திலும் விசேஷமாக கருதப்படுகிறது.

    கந்த சஷ்டி திருவிழாவில் விரதமிருக்கும் பக்தர்கள் அனைவரிடமும் காப்பு கட்டுதல், மாவிளக்கு எடுத்தல் மற்றும் தங்குதல் கட்டணமாக தலா ரூ.45 வசூலிக்கப்பட உள்ளது. இந்தநிலையில் கோவில் நிர்வாகம் உபயதாரர்கள் மூலமாக பால், வாழை பழம் பெற்று அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதில் சர்க்கரை கலந்த எலுமிச்சை பழச்சாறும், சுக்கு கலந்த தினை மாவும் வழங்கப்படுகிறது. 
    Next Story
    ×