search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறையில் திரளான பக்தர்கள் புனித நீராடியதை படத்தில் காணலாம்.
    X
    குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறையில் திரளான பக்தர்கள் புனித நீராடியதை படத்தில் காணலாம்.

    மகா புஷ்கர விழா: தாமிரபரணி ஆற்றில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

    மகா புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நெல்லை திணறியது. இதையொட்டி பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.
    தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இந்த விழா நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தகட்டங்கள், படித்துறைகளில் பகல் நேரத்தில் புனித நீராடும் நிகழ்ச்சியும், மாலையில் தாமிரபரணிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    இந்த விழாவில் தமிழக பக்தர்கள் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நெல்லைக்கு வந்து புனித நீராடி வருகிறார்கள்.

    நேற்று 11-வது நாள் விழா தாமிரபரணி படித்துறைகளில் நடந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சியம்மன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், கைலாசபுரம் தைப்பூச மண்டபம், நெல்லை மணிமூர்த்தீசுவரம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயு படித்துறைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேபோல் அம்பை, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், கோடகநல்லூர், அத்தாளநல்லூர் உள்ளிட்ட படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தாமிரபரணி ஆற்றில் நேற்று காணும் இடமெல்லாம் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது.

    வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் நெல்லை மாவட்டத்தில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட ஊர்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பாபநாசத்தில் அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட புஷ்கர விழா இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறையில் நடைபெறும் விழா நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது.

    பாபநாசத்தில் அகில பாரத துறவியர் சங்கம் சார்பில், சேனைத் தலைவர் மண்டபத்தில் தினமும் தாமிரபரணி புஷ்கர விழா நிகழ்ச்சிகள், மாநாடுகள் நடைபெற்று வருகிறது. பாபநாசம் படித்துறை இந்திர தீர்த்தத்தில் தினமும் மாலையில் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடக்கிறது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கண்டுகளிக்கின்றனர். பாபநாசத்தில் நேற்று அதிகாலை 3 மணி முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்களை போலீசார் அகஸ்தியர்பட்டியில் நிறுத்தி விட்டு, அரசு பஸ்களில் மட்டுமே அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் கோவிலுக்கு அருகே நீண்ட வரிசையில் நின்று படித்துறை இந்திர தீர்த்தக்கட்டத்தில் நீராடினர். பின்னர் கோவிலுக்குள் சென்று சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

    நேற்று காலை பாபநாசம் ராஜேசுவரி மண்டப படித்துறையில் தூத்துக்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குளித்து கொண்டிருந்தனர். அவர்களை திடீரென தண்ணீர் இழுத்து சென்றது. உடனே அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பக்தர்கள் அதிக அளவில் புனித நீராட குவிந்ததால் நெல்லை திணறியது.

    தாமிரபரணி புஷ்கர விழாவுக்கு வெளிமாவட்டம், பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ்கள், ரெயில்களில் நெல்லை வந்தனர். சில பக்தர்கள் வெளியூர்களில் இருந்து தனி வேன், கார்களில் வந்துள்ளனர். இதனால் நேற்று நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் பகுதியில் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து நெல்லை வந்த பஸ்கள், லாரிகள், கார்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அதாவது நெல்லை டவுன் தொண்டர் சன்னதியில் இருந்து, நயினார்குளம் ரோடு வழியாக, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை வழியாக நெல்லை புதிய பஸ் நிலையம் சென்றனர். காலை முதல் இரவு வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெல்லை ரெயில் நிலையத்தில் நேற்று வந்த அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிந்தன. முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கு வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலையில் வெளியூர் சென்ற ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிளாட்பாரங்கள் முழுவதும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 
    Next Story
    ×