search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அண்ணாமலையார் வரலாறு: கால் மாற்றி அமர்ந்த நந்தி
    X

    அண்ணாமலையார் வரலாறு: கால் மாற்றி அமர்ந்த நந்தி

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் அருகே கால் மாற்றி அமர்ந்த நந்தி தனது தலையை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி உள்ளது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    சிவாலயங்களில் கருவறை ஈசனை எந்த அளவுக்கு வழிபடுகிறோமோ அதே அளவுக்கு நந்தியையும் வழிபட வேண்டும். சிவனுக்கு நேர் எதிரில் இருக்கும் பாக்கியம் பெற்றவர் நந்தி மட்டுமே. நந்தியிடம் அனுமதி பெறாமல் சிவபெருமானை நெருங்க இயலாது.

    நந்தி என்றால் ஆனந்தத்தை தருபவர் என்று பொருள். நந்தியிடம் நாம் என்ன கோரிக்கை வைத்தாலும் அதை அவர் ஈசனிடம் தெரிவித்து நமது வாழ்க்கையை ஆனந்த மயமாக்குவார் என்பது ஐதீகமாகும்.

    பிரதோஷம் தினத்தன்று நந்திக்கு செய்யப்படும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளைக் கண்டு வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி விடும். இத்தகைய சிறப்பு பெற்ற நந்தி திருவண்ணாமலை தலத்தில் தனித்துவமான சிறப்புகளுடன் திகழ்கிறார்.

    திருவண்ணாமலை கோவிலுக்குள் மொத்தம் 8 நந்திகள் இருக்கின்றன. ராஜகோபுரத்தை கடந்ததும் ஐந்தாவது பிரகாரத்தில் முதலில் நம் கண்ணுக்கு மிகப்பெரிய நந்தி ஒன்று தென்படும். இந்த நந்தி சுமார் 12 அடி உயரம் கொண்டது.

    ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்துள்ள இந்த நந்தியை வல்லாள மகாராஜன் அமைத்ததாக கல்வெட்டு குறிப்புகள் உள்ளன. இந்த நந்தியை சுற்றி நான்கு தூண்கள் கொண்ட மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மாட்டுப் பொங்கல் அன்று இந்த நந்திக்கு 108 பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். பழம், காய்கறிகள், இனிப்பு வகைகள், ரூபாய் நோட்டுகள் என்று 108 வகையான பொருட்களால் அலங்காரம் செய்வார்கள். அதன் பிறகு தீபாராதனை நடத்தப்படும். இந்த அபிஷேக, அலங்காரத்தை கண்டுகளித்தால் சர்ப்பதோஷம் உள்பட அனைத்து தோஷங்களும் விலகும்.

    பொதுவாக பிரதோஷம் தினத்தன்று நந்திக்கு அபிஷேகம் செய்ய பசும்பால் கொடுத்தாலும் அலங்காரம் செய்ய தும்பை பூ வாங்கி கொடுத்தாலும் செல்வம் சேரும், பதவி உயர்வு கிடைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி உள்ளனர்.

    தை மாதம் மாட்டுப் பொங்கல் தினத்தன்று திருவண்ணாமலையில் உள்ள அனைத்து நந்திகளுக்கும் அண்ணாமலையார் காட்சி கொடுத்து சிறப்பு செய்வார். நந்திக்கு பெருமை சேர்க்கவே சிவன் இவ்வாறு எழுந்தருழுகிறார். பெரிய நந்தியை தொடர்ந்து நான்காம் பிரகாரத்தில் ஒரு நந்தியும், மூன்றாம் பிரகாரத்தில் ஒரு நந்தியும் உள்ளன.

    இந்த மூன்றாம் பிரகாரத்தில் உள்ள நந்தி அதிகார நந்தி என்று அழைக்கப்படுகிறார். சிவாலயங்களில் 5 வகை நந்தி இடம் பெறும் என்பார்கள். இதில் முக்கியமானது அதிகார நந்திதான். அவர் நந்திகளின் வரிசையில் மூன்றாவதாக வருபவர். அதை உறுதிப்படுத்தும் வகையில் திருவண்ணாமலை தலத்தில் மூன்றாம் பிரகாரத்தில் அதிகார நந்தி வீற்றுள்ளார்.

    இரண்டாம் பிரகாரத்திலும், முதல் பிரகாரத்திலும் அண்ணாமலையாரை நோக்கி நந்திகள் உள்ளன. ஆனால் அவை சிறிய நந்திகள். திருவண்ணாமலை தலத்தில் ராஜகோபுரத்தில் இருந்து உள்ளே செல்ல செல்ல இந்த நந்திகளின் உருவம் சிறியதாக குறுகி கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

    ஐந்தாம் பிரகாரத்தில் பெரிய நந்தி, நான்காம் பிரகாரத்தில் அதைவிட சிறிய நந்தி, மூன்றாம் பிரகாரத்தில் அதைவிட சிறிய நந்தி அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய நந்திகள் உள்ளன. அதாவது நாம் ஈசனை நெருங்க நெருங்க நம்மை சுருக்கிக் கொண்டு ஈசனிடம் சரணடைய வேண்டும் என்பதை இந்த நந்திகளின் வரிசை நமக்கு சொல்லாமல் சொல்கின்றன.



    அண்ணாமலையாருக்கு எதிரே மட்டுமின்றி உண்ணாமலை அம்மன் எதிரிலும் நந்திதான் இருக்கிறார். பொதுவாக சக்தி தலங்களில் அம்மனுக்கு எதிரில் சிம்மம்தான் காணப்படும். ஆனால் திருவண்ணாமலையில் அம்மனுக்கு எதிரில் நந்தி உள்ளது.

    இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு பார்வதி தேவி பூமிக்கு வந்தார். தான் தவம் செய்வதற்கு மிகவும் ஏற்ற இடம் எது என்று கேட்டு அவர் திருவண்ணாமலை தலத்துக்கு வந்தார். பூலோகத்திற்கு பார்வதி தாய் தனியாக புறப்பட்டதும் அவருக்கு பாதுகாப்புக்காக நந்தியும் புறப்பட்டு வந்தார்.

    திருவண்ணாமலையில் பார்வதி தேவி உண்ணாமலை அம்மனாக நிலைகொண்டதும் நந்தியும் அம்மனுக்கு அருகிலேயே நந்தியும் இருந்து விட்டார். இதை பிரதிபலிக்கும் வகையில் உண்ணாமலை அம்மனுக்கு எதிரில் நந்தியை நிறுவி உள்ளனர்.

    திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்கள் ஒவ்வொரு இடத்திலும் மலையின் ஒவ்வொரு வித தோற்றத்தை பார்த்து தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. அஷ்டலிங்கங்களில் ஒன்றான நிருதி லிங்கம் அருகில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து மலையை பார்த்தால் மலையின் தோற்றம் நந்தி முகமாக காட்சி அளிக்கும். அந்த இடத்துக்கு நந்தி முக தரிசனம் என்று பெயர்.

    அந்த இடத்தில் இருந்து வழிபாடு செய்தால் நந்தியின் முழு கருணையையும் பெற முடியும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த இடத்தின் சிறப்பு காரணமாக மலையே நந்தி வடிவமாக இருப்பதாக புகழ்கிறார்கள். இது தவிர கிரிவல பாதையில் ஜோதி நந்தி என்று ஒரு நந்தி இருக்கிறது. இந்த நந்தி முன்பு தீபம் ஏற்றி மலையை நோக்கி வழிபாடு செய்வதை பக்தர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    எல்லா இடங்களிலும் சிவனை நோக்கிதான் நந்தி இருப்பார். ஆனால் கிரிவல பாதையில் அஷ்டலிங்க சந்நதிகளில் இருக்கும் நந்தியை நீங்கள் மிக உன்னிப்பாக கவனித்தால் அந்த நந்திகள் அனைத்தும் மலையை நோக்கி திரும்பி இருப்பதை காணலாம். திருவண்ணாமலையில் சிவனே மலையாக வீற்றிருப்பதால் இந்த நந்திகள் அனைத்தும் மலையை நோக்கி இருப்பதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.

    கிரிவல பாதையில் அடிஅண்ணாமலை அருகே காசி லிங்கம் உள்ளது. அதன் எதிரே காசி நந்தி உள்ளது. அந்த நந்தி முதுகில் கம்பால் அடித்த வடு உள்ளது. அதுபோல பச்சையம்மன் கோவில் அருகே மலைமேடு பகுதியில் ஒரு நந்தி உள்ளது. மழை காலங்களில் இந்த நந்தி வாயில் இருந்து மழை தண்ணீர் வேகமாக வெளியேறும்.

    மேலும் மலையை சுற்றி அஷ்ட நந்திகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரம் நேர் எதிரே உள்ள சர்க்கரை குளம் கரையில் ஒரு நந்தி உள்ளது. அதுதான் அஷ்டநந்திகளில் முதல் நந்தி ஆகும்.  திருவண்ணாமலை ரெயில் நிலையம் அருகே மிகப்பெரிய நந்தி ஒன்று இருந்தது. அதுபோன்று திருவண்ணாமலையை சுற்றி இருந்த பிரமாண்ட நந்திகள் கால ஓட்டத்தில் அழிந்து விட்டன.

    தற்போது திருவண்ணாமலையில் உள்ள நந்திகளில் மிகப்பெரிய நந்தி ராஜகோபுரத்தை கடந்ததும் வரும் நந்திதான். இந்த நந்தி அமைப்பை நீங்கள் நன்றாக உற்று பார்த்தால் ஒரு வித்தியாசம் தெரியும். பொதுவாக சிவாலயங்களில் ஈசனை பார்த்தப்படி இருக்கும் நந்தி தனது இடது காலை மடக்கி வலது காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும். ஆனால் திருவண்ணாமலையில் உள்ள பெரிய நந்தி அப்படி இல்லை. அந்த நந்தி தனது வலது காலை மடக்கி இடது காலை முன்வைத்து அமர்ந்துள்ளது. இந்த வித்தியாசமான வடிவமைப்பின் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்வு கூறப்படுகிறது.

    முகலாயர்கள் ஆட்சி காலத்தில் திருவண்ணாமலை கோவிலை ஒரு முகலாய மன்னன் கைப்பற்றினான். அவன் கோவிலுக்குள் நின்று கொண்டிருந்தபோது 5 சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டை சுமந்துக் கொண்டு சென்றனர். உடனே முகலாய மன்னன், ‘‘எதற்காக இந்த காளைமாட்டை சுமந்து செல்கிறீர்கள்?’’ என்று கேட்டான். உடனே சிவபக்தர்கள், “இது எங்களது ஈசனை சுமக்கும் வாகனம். ஈசனை சுமப்பவரை நாங்கள் சுமப்பது எங்களுக்கு இந்த பிறவியில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்” என்று கூறினார்கள்.

    இதை கேட்டதும் முகலாய மன்னனுக்கு கோபம் வந்தது. “நான் இந்த காளை மாட்டை இரண்டு துண்டாக வெட்டுகிறேன். உங்கள் ஈசன் வந்து அதை ஒன்றாக சேர்க்க முடியுமா?” என்று ஏளனமாக சொன்னான். அதோடு மாட்டை இரண்டு துண்டாகவும் வெட்டினான். அதிர்ச்சி அடைந்த சிவ பக்தர்கள் அண்ணாமலையார் சன்னதிக்கு ஓடோடி சென்று கண்ணீர் மல்க முறையிட்டனர். அப்போது அசரீரி ஒலித்தது.



    “வடக்கு திசை நோக்கி செல்லுங்கள். அங்கே என் பக்தன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி அமர்ந்து இருப்பான். அவனை இங்கே அழைத்து வாருங்கள்” என்று அசரீரியில் அண்ணாமலையார் கூறினார். இதையடுத்து சிவபக்தர்கள் வடக்கு திசை நோக்கி சென்றனர். அங்கு வாலிபன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தான்.

    அவனைப் பார்த்ததும் சிவ பக்தர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. “இந்த சிறுவனா வந்து காளை மாட்டுக்கு உயிர் கொடுக்க போகிறான்” என்று நினைத்தனர். அடுத்த வினாடி அவர்களை நோக்கி புலி ஒன்று பாய்ந்தது. அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை சொல்லி புலியை தடுத்து நிறுத்தினான். இதனால் சிவ பக்தர்களுக்கு அந்த சிறுவன் மீது நம்பிக்கை வந்தது.

    அண்ணாமலையார் ஆலயத்துக்குள் நடந்ததை கூறினார்கள். உடனே அந்த வாலிபன் கோவிலுக்கு புறப்பட்டான். கோவிலுக்குள் வந்ததும் இரண்டு துண்டாக வெட்டுப்பட்டு கிடந்த காளை மாட்டை பார்த்தான். கண்ணீர் மல்க நமச்சிவாய மந்திரத்தை கூறினான். அவன் சொல்ல சொல்ல வெட்டுப்பட்டு கிடந்த மாடு ஒன்றாக இணைந்து உயிர் பெற்றது.

    இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. என்றாலும் அவன் சிவ பக்தர்களை பார்த்து, “இந்த வாலிபன் ஏதோ சித்து விளையாட்டு விளையாடுகிறான். இதை நான் நம்ப மாட்டேன். இன்னொரு போட்டி வைக்கிறேன். அதில் இந்த வாலிபன் வெற்றி பெற்றால் என்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கு தந்து விடுகிறேன். இல்லையென்றால் இந்த ஆலயத்தை இடித்து தகர்த்து விடுவேன்” என்றான்.

    அவனது இந்த சவாலை வாலிபன் ஏற்றுக் கொண்டான். உடனே முகலாய மன்னன் ஒரு தட்டு நிறைய மாமிசத்தை கொண்டு வர உத்தரவிட்டான். அந்த மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள். அவருக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால் அவை பூக்களாக மாறட்டும் என்றான். அவன் உத்தரவுபடி மாமிசத்தை அண்ணாமலையார் அருகே கொண்டு சென்றனர். அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அடுத்த வினாடி மாமிசங்கள் அனைத்தும் பல்வேறு வகை பூக்களாக மாறின.

    இதையும் முகலாய மன்னனால் நம்ப முடியவில்லை. ராஜகோபுரம் அருகில் உள்ள நந்தி அருகில் வந்தான். அந்த நந்தியை பார்த்தவன், “இந்த நந்திக்கு உன்னால் உயிர் கொடுக்க முடியுமா? அப்படியே கொடுத்தாலும் அதன் கால்களை மாற்றி அமர வைக்க முடியுமா?” என்று சவால் விட்டான்.

    இந்த சவாலையும் ஏற்றுக் கொண்ட வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல நந்தி உயிர் பெற்று எழுந்தது. தனது கால்களை மாற்றி அமர்ந்தது. இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு கை-கால்கள் நடுங்கியது.

    அண்ணாமலையார் ஆலயத்துக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான். அவனுக்கு அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய வாலிபன்தான் பிற்காலத்தில் வீரேகிய முனிவராக மாறினார். திருவண்ணாமலை வடக்கில் உள்ள சீனந்தல் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நினைவாக அந்த ஊரில் ஒரு மடம் உள்ளது.

    அவரைப் போற்றும் வகையில் ராஜகோபுரம் அருகே கால் மாற்றி அமர்ந்த நந்தி தனது தலையை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி உள்ளது. இப்படி பல அதிசயங்கள் திருவண்ணாமலை தலத்துக்குள் உள்ளன. 
    Next Story
    ×