search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்தாரம்மன் பெயர் வந்தது எப்படி?
    X

    முத்தாரம்மன் பெயர் வந்தது எப்படி?

    குலசேகரன்பட்டினம் அம்பாளுக்கு முத்தாரம்மன் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவையனைத்தும் பொருத்தமானதாகவே தெரிகிறது.
    அன்னை மகாசக்தி ஒவ்வொரு தலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அருள்பாலிக்கிறாள். அந்த வகையில் குலசேகரன்பட்டினம் அம்பாளுக்கு முத்தாரம்மன் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவையனைத்தும் பொருத்தமானதாகவே தெரிகிறது.

    பாண்டிநாடு முத்துடைத்து என்பார்கள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக் குவித்து தேவியாக நினைத்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன. முத்துகளிலிருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள் என்பது ஒரு கருத்து.

    பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள். கிராமங்களில் அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச் செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்துநோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் எனஅழைக்கப்படுகிறாள்.

    சிப்பியிலிருந்து விடுபட்டது முத்து. முத்தைச் சிப்பி மூடியிருக்கிறது. உயிர்களை ஆணவ மலம் மூடி மறைத்துள்ளது. உயிர்களை மலக் கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் சீவன் முத்தர்கள் ஆவர். அம்பாள் சிப்பியிலிருந்து முத்துக்களைப் பிரித்தெடுப்பது போல உலக உயிர்களை மலக்கட்டு களிலிருந்து பிரித்துச் சீவன் முத்தர்களாக மாற்று கிறாள். இதனால் அன்னைக்கு, முத்தாரம்மன் என்ற பெயர் ஏற்பட்டது.

    இப்படி முத்தாரம்மன் பெயர் தோன்றியதற்கு பல கதைகள் உள்ளன. குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில், மற்ற பழைய கோவில்களை போல சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிட அமைப்புகளுடனோ அல்லது உயர்ந்த கோபுரங்கள் மற்றும் மாடவீதிகள் கொண்டதாகவோ அமையவில்லை. அந்த ஆலயம் மிகச்சிறிய ஆலயம்தான். ஆனால் முத்தாரம்மனின் அருளாட்சி வரையறுக்க முடியாத எல்லையாக பரவியுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் சாதி, மத வேறுபாடின்றி குலசை முத்தாரம்மனை குலதெய்வம் போல வழிபடுகின்றனர். அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் குலசை முத்தாரம்மனின் நாமத்தை உச்சரிக்கத் தவறுவதில்லை.
    Next Story
    ×