search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்தாரம்மன் ஆட்சி செய்யும் குலசை
    X

    முத்தாரம்மன் ஆட்சி செய்யும் குலசை

    சக்தி தலங்களில் குலசை என்று அழைக்கப்படும் குலசேகரன்பட்டினத்தில் ஆட்சி செய்யும் முத்தாரம்மன் தலம் மிகமிக சக்தி வாய்ந்த தலமாக திகழ்கிறது.
    திங்கள் ஈராம் தினங்கள் ஓரேழும் திருப்பெயரை
    எங்கிருந்தாலும் புகழ்வேன் நான் செலும் இடங்களெல்லாம்
    மங்களம் பொங்கி மரபோங்கி வாழவரம் தருவாய்
    எங்கள் முத்தாரம்மையே! அகிலாண்ட நாயகியே போற்றி!

    தமிழ்நாட்டில் எத்தனையோ சக்தி தலங்கள் உள்ளன. காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போன்று பெரும்பாலான ஊர்களில் அம்மன் ஆட்சி செய்கிறாள். அவளது அருள் எங்கும் நிரம்பி இருக்கிறது. என்றாலும் சக்தி தலங்களில் குலசை என்று அழைக்கப்படும் குலசேகரன்பட்டினத்தில் ஆட்சி செய்யும் முத்தாரம்மன் தலம் மிகமிக சக்தி வாய்ந்த தலமாக திகழ்கிறது. திருச்செந்தூருக்கு மிக, மிக அருகில் இந்த தலம் உள்ளது.

    தமிழ்நாட்டில் சக்தி ஆலயங்கள் தோறும் தற்போது நவராத்திரி திருவிழா நடத்தப்படுகிறது. ஆனால் குலசையில் நடக்கும் விழா தசரா திருவிழாவாக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இந்தியாவில் மைசூர் தசரா திருவிழாவைத்தான் மிகப்புகழ் பெற்றதாக சொல்வார்கள். ஆனால் குலசை தசரா திருவிழா அதையும் மிஞ்சி சாதனை படைத்து வருகிறது.

    குலசை தசரா மகிசா சம்ஹார தினத்தன்று சுமார் 15 லட்சம் பேர் திரள்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்தவொரு சக்தி தலத்திலும் இல்லாத அதிசயம் இது. ஆண்டுக்கு ஆண்டு குலசை முத்தாரம்மன் அருளை பெற பக்தர்கள் குலசைக்கு படையெடுத்தப்படி உள்ளனர். இந்த ஊர் இப்போதுதான் புகழ்பெற்றது என்று நினைக்காதீர்கள். சங்க காலத்திலேயே இந்த ஊர் புகழ் பெற்று இருந்தது.

    சங்க காலத்தில் குலசேகரன்பட்டினம் ‘‘தென் மறைநாடு’’ என்றழைக்கப்பட்டது. இந்த ஊர் கடல் பகுதி இயற்கையாகவே மிகப் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வசதி கொண்டது. இதனால் சங்க காலத்தில் குலசேகரன்பட்டினம் துறைமுகம் மிகப் பெரும் வாணிப கேந்திரமாகத் திகழ்ந்தது. சங்க காலத்தில் தமிழர்கள் குலசேகரன்பட்டினம் துறைமுகம் வழியாகவே ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்தனர். அது போல ஆப்பிரிக்கர்களும் குலசேகரன்பட்டினம் வந்ததற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

    சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் குலசேகரன்பட்டினம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அப்போது குலசேகரன்பட்டினம், வீரவளநாடு என்றழைக்கப் பட்டது. மூவேந்தர்களும் இந்த ஊர் துறைமுகம் வழியாகத்தான் நவதானியங்கள், தேங்காய், எண்ணை, மரம் போன்றவற்றை இறக்குமதி செய்தனர், உப்பு, கருப்பட்டி, கருவாடு, முத்து போன்றவற்றை ஏற்றுமதி செய்தனர். குலசேகரப் பட்டினத்தில் இருந்து சென்ற உப்பு ஒரு காலத்தில் உலகம் முழுவதும் வரவேற்பு பெற்று இருந்ததாக வரலாற்று குறிப்புகளில் உள்ளது.

    அரபு நாடுகளில் இருந்து பாண்டிய மன்னர்கள் குதிரைகளை குலசேகரன்பட்டினம் வழியாகத்தான் இறக்குமதி செய்தனர். இலங்கையை வென்ற சோழ மன்னன் இந்நகர் வழியாகத்தான் நாடு திரும்பினான். பாண்டிய மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டியனின் மகன் குலசேகரப் பாண்டியன் இப்பகுதியை கி.பி.1251ம் ஆண்டு முதல் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

    குலசேகர பாண்டிய மன்னன், சுற்றியுள்ள சிற்றரசர்களிடம் போரிட்டு வெற்றிபெற்று தம் ஆதிக்கத்தை மதுரை முழுவதும் பரப்பினார். இதன் விளைவாக கேரளா நாட்டை கைப்பற்ற எண்ணி திருவனந்தபுர மன்னனிடம் தோல்வியுற்றான். வரும் வழியில் இரவு வெகு நேரமானதால் தூங்கிவிட்டான் பாண்டிய மன்னன். அவன்முன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றினாள்.

    “பாண்டிய மன்னா தூங்கிவிடாதே, தூங்கி உன் நாட்டின் பெருமை இழந்து விடாதே ஒருமுறை தோற்றால் என்ன? மறுமுறை முயற்சி செய் என்று அருள்வாக்கு சொல்லி ஆசிர்வதித்து மறைந்தாள். மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அம்மனுக்கு கோயில் கட்டினான். கோவில் அருகே ஊர் அமைந்ததால் மன்னனின் நினைவாக குலசேகர பட்டினம் என பெயர் பெற்றது.

    சில நூற்றாண்டுகள் கழித்து ஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்பட்ட போதும், குலசேகரன்பட்டினம் தன் முக்கியத்துவத்தை இழக்கவில்லை. குசேகரன்பட்டினத்தை சிறந்த துறைமுகமாக பயன்படுத்திய ஆங்கிலேயர்கள், பனை மரங்கள் தந்த பயனுள்ள பொருட்களை தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்வதற்காக திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு ரெயில் போக்குவரத்தையும் நடத்தி வந்தனர். அதே சமயத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்திலும் குலசேகரன்பட்டினம் முதன்மையாக இருந்தது. 1942-ம் ஆண்டு நாடெங்கும் ஆகஸ்டு புரட்சி ஏற்பட்ட போது குலசேகரன்பட்டினத்தில் ஆங்கிலேய அதிகாரி லோன் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    இத்தகைய சிறப்புடைய குலசேகரன்பட்டினம், நாடு விடுதலை அடைந்த பிறகு சில சிறப்புகளை இழந்து விட்டது. துறைமுகம் இல்லாமல் போய்விட்டது. ரெயில் போக்குவரத்து நடந்ததற்கான சுவடே மறைந்து போய் விட்டது.

    இத்தகைய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குலசேகரன்பட்டினம் ஊரின் பெயர் மீண்டும் நாடெங்கும் பேசப்படும் வகையில் உருவெடுத்துள்ளது. அதற்கு காரணம் குலசேகரன்பபட்டினத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் ஆன்மீக புரட்சி. குலசேகரன்பட்டினத்தில் வீற்றிருந்து அருளாட்சி செய்து வரும் முத்தாரம்மன் கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளாள். தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் குலசை வந்து முத்தாரம்மனை மனம் உருக வழிபட்டு மனதில் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

    குறிப்பாக புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா, இன்று குலசை பெயரை உலகம் முழுக்க வாழம் தமிழர்களிடம் மட்டுமின்றி எல்லா தரப்பினரிடமும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தலம் இந்தியாவின் முக்கிய சக்தி தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
    Next Story
    ×