search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் புனிதநீராடிய பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.
    X
    நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் புனிதநீராடிய பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

    தாமிரபரணி புஷ்கர விழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்

    தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி ஆற்று படித்துறைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    தாமிரபரணி மகா புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 11-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தக்கட்டங்களில் புனிதநீராடி வருகின்றனர். தாமிரபரணி ஆற்றுக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்ற வண்ணம் உள்ளனர்.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களில் இருந்து நெல்லைக்கு வந்த ரெயில்கள், பஸ்களில் ஏராளமான மக்கள் வந்தனர். இதுதவிர கார், வேன்களிலும் ஏராளமானோர் வந்தனர்.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறை, மேலநத்தம் அக்னிதீர்த்த கட்டம், சிந்துபூந்துறை சப்ததீர்த்த கட்டம், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை அருகில் உள்ள ஜடாயு துறை, மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித்துறை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சேரன்மாதேவியில் தாமிரபரணிக்கு ஆரத்தி பூஜை நடந்தபோது எடுத்த படம்.

    இதுதவிர பலர் ஆற்றில் பரவலாக அனைத்து இடங்களிலும் குளித்தனர். தாமிரபரணி ஆற்றில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவு மக்கள் வந்திருந்தனர்.

    கூட்ட நெரிசல் காரணமாக தாமிரபரணி ஆற்றில் பாதுகாப்பு நடவடிக்கையாக தண்ணீர் திறப்பு அளவு குறைக்கப்பட்டது. தைப்பூச மண்டப படித்துறையில் நேற்று காலை வேத பாராயணம், ஹோமங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெற்றது.

    மேலதிருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் உள்ள சீனிவாச தீர்த்த கட்டத்தில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இங்கு பக்தர்கள் புனிதநீராடி சீனிவாச பெருமாள் கோவிலில் தரிசனம் செய்தனர்.

    தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தகட்டங்கள் பகுதியில் நேற்று கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    Next Story
    ×