search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விநாயகரின் கலியுக லீலை
    X

    விநாயகரின் கலியுக லீலை

    விநாயகர்மீது கொண்ட ஆழ்ந்த பக்தியால் கோவிலுக்கே சென்று முழு முதல்வனுக்கு முதல் மரியாதை செலுத்துகின்றனர். இதற்கு விநாயகப்பெருமானின் லீலையே காரணம்.
    காவிரி ஆற்றங்கரையில் பிள்ளையார் பெயரில் அமைந்த இயற்கை எழில் சூழ்ந்த கிராமம் தான் கணபதி அக்ரஹாரம். விநாயகரின் திருநாமம் மகாகணபதி. அகத்திய முனிவரால் பஞ்சம் போக்குவதற்காக கவுதம மகரிஷி பூஜை செய்த தலம். விநாயகர் சதுர்த்தி அன்று எல்லா ஊர்களிலும் மக்கள் மண்ணால் ஆன பிள்ளையார் சிலைகளை வாங்கி வந்து வீடுகளில் தனியாக பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் விநாயகர் சிலைகளை மேள, தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து சென்று ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளில் கரைத்து விடுவது வழக்கம். ஆனால் கணபதி அக்ரஹாரத்தில் மட்டும் இதற்கு விதி விலக்கு.

    இந்த கிராம மக்கள் விநாயகர் சதுர்த்தியன்று வீட்டில் பிள்ளையாரை தனியாக வைத்து பூஜை செய்வது இல்லை. தண்ணீரில் கரைப்பது இல்லை. இந்த பழக்கம் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. எல்லா நிவேதனப்பொருட்களையும் பிள்ளையார் கோவிலுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்வார்கள்.

    ‘கணேசாத் அன்யத் நகிங்கன்’ என்று சொல்வார்கள். அதாவது கணேசருக்கு மேல் உயர்ந்தவர் வேறு ஒருவரும் இல்லை என்பது இதன் பொருள். விநாயகர்மீது கொண்ட ஆழ்ந்த பக்தியால் கோவிலுக்கே சென்று முழு முதல்வனுக்கு முதல் மரியாதை செலுத்துகின்றனர். இதற்கு விநாயகப்பெருமானின் லீலையே காரணம்.

    தஞ்சை அரண்மனையில் மராட்டியத்தை சேர்ந்த ஒருவர் அதிகாரியாக இருந்தார். அவர் இங்கிருந்த போது விநாயகர் சதுர்த்தியன்று வீட்டில் பிள்ளையார் வைத்து பூஜை செய்ய முடிவு செய்து நிவேதனப்பொருட்களை தாம்பலத்தில் வைத்து வீட்டிற்குள் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது தாம்பூலம் முழுவதும் தேள்கள் இருந்தன. அவர் பயந்து போய் அக்கம்பக்கத்தில் சொல்ல அவர்கள் இவ்வூர் வழக்கத்தை சொல்லி விளக்கினர். பின்னர் அவர் எல்லா பொருட்களையும் கோவிலுக்கு எடுத்துச் சென்று ஒப்படைத்தார்.

    ஸ்ரீராமர் பட்டாபிஷேக விழாவை அயோத்தி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் நடைபெறும் விழாவாக பாவித்து எப்படி ஆனந்தம் அடைந்தார்களோ, அதை போல கணபதி அக்ரஹார கிராம மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை தங்கள் வீடுகளில் நடைபெறும் விழாவாக பாவித்து பரவசம் அடைகின்றனர். இந்த ஊர் மக்கள் வெளியூரில் இருந்தாலும், வெளிநாட்டில் இருந்தாலும் வீடுகளில் பூஜை செய்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×