search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
    X

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான சதுர்த்தி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது மூஷிக படம் தாங்கிய கொடி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், கொடிமரம் அருகே உற்சவர் விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசதேவர் ஆகிய சாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. சதுர்த்தி விழாவின் முதல் நாளான நேற்றிரவு மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையடுத்து சதுர்த்தி விழாவையொட்டி தினந்தோறும் இரவு சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் 6-ம் திருநாளான வருகிற 9-ந்தேதி கஜமுகா சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ம் திருநாளான 12-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    இதையொட்டி அன்று மாலை 4.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கோவிலில் உள்ள மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் தான் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவின் 10-ம் திருநாளான விநாயகர் சதுர்த்தி அன்று காலை கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு திருமுக்கூரணி மோதக கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இரவு பஞ்சமூர்த்தி சாமிகள் வீதிஉலா வரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கோனாப்பட்டு அருணாசலம் செட்டியார் மற்றும் அரிமளம் சிதம்பரம் செட்டியார் ஆகியோர் தலைமையில் கோவில் குருக்கள், ஊழியர்கள் செய்துள்ளனர். 
    Next Story
    ×