search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நீலிவனேஸ்வரர் சிறிய சப்பரத்தில் எழுந்தருளி காட்சி.
    X
    நீலிவனேஸ்வரர் சிறிய சப்பரத்தில் எழுந்தருளி காட்சி.

    திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா

    திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    முன்னொரு காலத்தில் மதுரையில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்குள்ள வைகை அணை நிரம்பி உடைந்து விட்டது. அந்த உடைப்பை சரிசெய்ய, வீட்டுக்கு ஒருவர் வர வேண்டும் என்று மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் உத்தரவிட்டான். அதன்படி ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு நபர் அந்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது புட்டு வியாபாரம் செய்யும் ஒரு மூதாட்டி தனது சார்பில் அனுப்ப வீட்டில் ஒரு ஆள் கிடைக்கவில்லையே, இதை அறிந்தால் மன்னனின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று கலங்கி தனக்கு உதவி செய்யும்படி சிவபெருமானை வேண்டினாள். மூதாட்டியின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு சிவபெருமானே கூலி தொழிலாளியாக மாறி மண் சுமந்து வைகை கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அதற்கு கூலியாக மூதாட்டியிடம் புட்டு வாங்கியதாக வரலாறு.

    இதனை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா நடைபெறுகிறது. அதன்படி நேற்று இவ்விழா நடைபெற்றது. இதற்காக கோவிலின் வலது புறத்தில் சிறிய அளவு அணை போன்று கட்டப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நீலிவனேஸ்வரர் சிறிய சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து விழா நடக்கும் இடத்திற்கு வந்தடைந்தார். அதைத்தொடர்ந்து அங்கு சாமிக்கு கோவிலின் தலைமை அர்ச்சகர் சங்கர் குருக்கள் தலைமையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து தண்ணீர் நிரப்பிய அணையில் பூக்கள் தூவப்பட்டது. தொடர்ந்து அணையின் ஒரு ஓரத்தில் உடைப்பு ஏற்பட்டது போல செய்து பின்னர் அதனை மண்வெட்டி மூலம் மண்ணை எடுத்து அடைப்பது போன்று விழா நடைபெற்றது.

    இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை திருச்சி உதவி ஆணையர் ராணி மேற்பார்வையில் கோவில் செயல் அலுவலர் ஹேமலதா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். 
    Next Story
    ×