search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்
    X

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பூமிப்பிராட்டியாம் ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூர நன்னாளை கொண்டாடும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர பெருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    12 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில், 9-ம் நாளான நேற்று தமிழ்நாட்டின் 2-வது பெரிய தேரான ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, அதிகாலை சாமிகளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று, தனித்தனி தோளுக்கினியான்களில் திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. தேரில் ஆண்டாள்-ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    காலை 7.20 மணிக்கு தேரோட்டத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா எம்.எல்.ஏ. வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேர் 4 ரத வீதிகளின் வழியே வந்து காலை 9.50 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்து ஆடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 2 புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு தேரினை தள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்டன.

    தேரில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள், ரெங்கமன்னார்.


    ஏராளமான பக்தர்கள் ரத வீதிகளில் திரண்டு தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தது.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    குற்றத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக நகரின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும் ‘ஹெலி கேமரா‘ மூலம் ரத வீதிகள் கண்காணிக்கப்பட்டன.

    தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். 
    Next Story
    ×