search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேலூரில் இருந்து பக்தர்கள் வாழைப்பழ தார்களை தலைச்சுமையாக கொண்டு சென்ற காட்சி.
    X
    மேலூரில் இருந்து பக்தர்கள் வாழைப்பழ தார்களை தலைச்சுமையாக கொண்டு சென்ற காட்சி.

    18 சித்தர்கள் கோவில் திருவிழா - வாழைப்பழ தார்களை கொண்டு சென்ற பக்தர்கள்

    மேலூர் அருகே உள்ள 18 சித்தர்கள் கோவில் திருவிழாவுக்கு வாழைப்பழ தார்களை பக்தர்கள் பாரம்பரிய வழக்கப்படி தலைச்சுமையாக கொண்டு சென்றனர்.
    கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து அளிப்பார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்பவர்களே சித்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    அதனால் தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள் கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சாமி தரிசனம் செய்வதாக கூறப்படுகிறது. இவ்வாறு பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாங்குளம் மீனாட்சிபுரத்தில் மலை அடிவாரத்தில் 18 சித்தர்கள் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இங்கு பாரம்பரிய வழக்கப்படி பக்தர்கள் ஆண்டுதோறும் வழிபாடு செய்து வருகிறார்கள்.

    அதாவது, கோவிலில் இருந்து மலைப்பாதை, ஒற்றையடிப்பாதை வழியாக பாதயாத்திரையாக மேலூருக்கு வந்து சித்தர்களுக்கு படைத்து வழிபட வாழைப்பழ தார்களை வாங்கிச்செல்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக நேற்று ஏராளமான பக்தர்கள் மேலூருக்கு பாதயாத்திரையாக வந்து வாழைப்பழ தார்களை வாங்கி தலைச்சுமையாக கல்லம்பட்டி, அரிட்டாபட்டி, செட்டியார்பட்டி, கிடாரிப்பட்டி, மாங்குளம் வழியாக மலை அடிவாரத்தில் உள்ள கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

    இந்த வாழைப்பழங்கள் சித்தர்களுக்கு இன்று நடைபெறும் திருவிழாவில் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு வாழைப்பழ பிரசாதம் வழங்கப்படுகிறது. திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் திரளாக கலந்துகொள்கிறார்கள். 
    Next Story
    ×