search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கேட்ட வரம் தரும் ஆடிப்பூரம் விரதம்
    X

    கேட்ட வரம் தரும் ஆடிப்பூரம் விரதம்

    திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    ஆடி மாதம் நம் தமிழக கோவில்கள் திருவிழா போல் களை கட்டி இருக்கும் மாதம். ஆடி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என்ற வரிசையில் ஆடி அமாவாசையை அடுத்து வரும் மிகப்பெரிய அம்மன் விழா ஆடிப்பூரம் ஆகும். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி மாதம் அன்றுபூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியின் அம்சமான ஆண்டாள் அவதரித்த நாள். ஆண்டாள் ஜெயந்தி 27 நட்சத்திரங்களில் பூரம் ஒன்று. ஸ்ரீரங்கநாதரிடம் ஆண்டாள் கொண்ட பக்தியினை நாடே அறியும்.

    ஆண்டாள் அவதரித்த இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் யார் வயிற்றிலும் பிறக்கவில்லை. அங்கு பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருந்த பெரியாழ்வாருக்கு துளசி செடி அடியில் ஆண்டாள் சிசுவாய் கிடைத்தாள். பெரியாழ்வார் தன் குழந்தையாகவே ஆண்டாளை வளர்த்தாள். பெரியாழ்வார் மிக விடியற்காலையில் பூக்களைப் பறித்து அதனை தொடுத்து பெருமாளுக்கு அளித்து வந்தார்.

    ஆண்டாளோ அம்மாலைகளை தான் சூடி பிறகே பெருமாளுக்கு அளித்தார். இதனைக் கண்ட பெரியாழ்வார் பெண்ணை கடிந்து கொண்டார். இறைவனிடம் மன்னிப்பும் கேட்டார். ஆனால் இறைவனோ பெரியாழ்வாரின் கனவில் வந்து ஆண்டாள் சூடிக் கொண்ட மாலையே தனக்கு வேண்டும் என்றார். பெரியாழ்வார் தான் வளர்க்கும் குழந்தை தெய்வக் குழந்தை என புரிந்து கொண்டார். மண வயதை நெருங்கியதும் ஆண்டாளை சீரும் சிறப்புமாய் பெருமாளின் கட்டளைப்படி ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்ல ஆண்டாள் ஒளியாய் தெய்வத்துடன் சேர்ந்தாள். மெய் சிலிர்க்க வைக்கும் இத்தகு ஆன்மீக நிகழ்வுகளுக்கு நம் நாடே அதிகம் சொந்தமானது. அந்த பூமியில் பிறந்த நாம் அந்த பாரம்பரியத்தில் வந்த நாம் இந்த அருமை பெருமைகளை போற்றி கொண்டாட வேண்டாமா!

    10-வது நாள் திருவிழாவாக ஆண்டாளின் திருக்கல்யாணமாக வைணவ கோவிலில் கொண்டாடப்படுகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 நாட்களும் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். இதேபோன்று ஸ்ரீரங்கத்திலும் நடைபெறும்.

    ஆடிப்பூரத்தன்று யோகிகளும் சித்தர்களும் தன் தவத்தினை தொடங்குகின்றனர் என புராணங்கள் கூறுகின்றன. கல்யாணமாகாத பெண்கள் அம்மனை வணங்குவது நல்ல கணவனை அருளும் என்பதும் கல்யாணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழும் ஆசீர்வாதத்தினை சக்தி அருளுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அநேக பெண்கள் ஏழை சுமங்கலி பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பணம் வைத்துக் கொடுங்கள். பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வர்.

    ஆடிப்பூரம், 10-வது திருவிழா. ஆண்டாளின் திருக்கல்யாண நாள் அன்று பெண்கள் வீட்டினை சுத்தம் செய்து பூஜை அறையை அலங்காரம் செய்வர். ஆண்டாளுக்கும் பிடித்த தாமரைப்பூ, சிகப்பு நிற ஆடை, கல்கண்டு சாதம் இவற்றினை அளிப்பார்கள்.


    கோவில்களில் ஆண்டாள் மணப்பெண்ணாக மிக அழகாக அலங்கரிப்பார்கள். பெருமாளுடன் ஆண்டாள் கல்யாணம் நிகழும். அன்று முழுவதும் வழிபாடும் ஆரத்தியும் நடைபெறும். முழு நாளும் வருவோருக்கு பிரசாதம் அளிக்கப்படும். அன்று திருப்பாவை படித்து வழிபாடு நடைபெறும். மாலை தான் சூடி பக்தியோடு இறைவனுக்கு அளித்ததால் சூடிக் கொடுத்த சுடர் கொடி என்ற பெயரும் ஆண்டாளுக்கு உண்டு. பக்தியால் இறைவனை அடையலாம் என்பதைக்காட்ட மகாலட்சுமியே நமக்குக்காட்டிய வழி இது.

    சைவ கோவில்களில் ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு அநேகர் கண்ணாடி வளையல்கள் அணிவித்து வளைகாப்பு விழாவாகக் கொண்டாடுவது காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஒரு சமயம் பெரிய பாளையத்தில் கண்ணாடி வளையல் வியாபாரி ஒருவர் வேப்ப மரத்தடியில் வளையல் பெட்டியினை வைத்து விட்டு உறங்கினார். கனவில் அம்மன் தோன்றி தான் ரேணுகா தேவி என்றும் இந்த வேப்ப மரத்தடியில் சுயம்புவாக எழுந்தருளி இருப்பதாகவும் அவரது வளையல் பெட்டியில் உள்ள கண்ணாடி வளையல்களை தான் அணிந்துள்ளதாகவும் கூறினாள்.

    மிகவும் மகிழ்ந்த வியாபாரி அங்கே கோவில் எழுப்பினார். அங்கு வளையல் அணிவித்து வேண்டியவர்க்கு வேண்டிய நல்லவைகள், நியாயமானவைகள் நடந்தன. வாழ்வில் நல்ல முன்னேற்றம் பெற்றனர். கர்ப்பிணி ஆடிப் பூரத்தன்று வளையல் சாத்தி வழிபட்டால் பெண்களுக்கு நல்ல சுகப்பிரசவம் நடைபெறும் என்பது ஐதீகம். மேலும் அன்று சக்தி ஸ்தலங்களில் கேட்ட வரம் கிடைக்கும். ஆரோக்கியம், செல்வ செழிப்பு உண்டாகும் என்பர். பலர் அன்று கோவில்களில் ஆடிகூழ் ஊற்றுவர்.

    அன்று அம்மனுக்கு 5 வகை உணவு மற்றும் அப்பம், அதிரசம், இவற்றினை நைவேத்தியமாக அளிப்பர். அணிவிக்கப்படும் வளையல்களும், பிரசாதமும் அனைவருக்கும் வழங்கப்படும். அன்று அம்மனுக்கு மலர், பழம், காய்கனி, மஞ்சள், குங்குமம் இவற்றால் நடைபெறும் அர்ச்சனைகளும் அலங்காரங்களும் மிகச்சிறப்பாக இருக்கும்.

    மயிலாப்பூர் கற்பகாம்பாள், சிருங்கேரி சாரதா, காஞ்சி காமாட்சி அம்மன், கோல விழி அம்மன், முண்டகக் கண்ணி அம்மன் உள்பட சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சக்தி கோவில்களும் பிரம்மாண்ட கோலாகலத்துடன் ஆடிப்பூரம் அன்று விளங்கும். சக்தி கோவில்களில் ஆடிப்பூரம் அன்று லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுவது வழக்கம் எனப் பார்த்தோம்.

    வீடுகளிலும் அவ்வாறு செய்பவர்கள் உண்டு. லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகள் சிலவற்றினை இங்கு பார்ப்போமா! ஆதி பராசக்தியே லலிதாம்பிகையாக தோன்றினார். லலிதா சகஸ்ர நாமம் என்பது இந்துக்களின் புனித அம்பிகை வழிபாட்டு ஸ்லோகம். லலிதாம்பிகையினைப் போற்றும் ஆயிரம் நாமாக்களையே லலிதா சகஸ்ரநாமம் என்கிறோம். பிரம்மாண்ட புராணத்தில் பகவான் ஹயக்கிரீவரை அகத்திய மாமுனி கேட்டு கொண்டதன் பேரில் ஸ்ரீ ஹயக்கிரீவர் லலிதாம்பிகையின் பரம ரகசியமான 1000 நாமாக்களை கூறினார். ஸ்ரீ ஹயக் கிரீவர் விஷ்ணுவின் அம்சம். குதிரை முகம் கொண்டவர். மிகுந்த ஞானமும், அறிவும் படைத்தவர்.

    லலிதா சகஸ்ரநாமத்தின் சிறப்பு அம்சங்கள்:

    இதனை அன்றாடம் கூற

    * பரபரப்பு, மனச் சோர்வு நீங்கும். அம்பிகையின் நாமங்களை சொல்லும்போது அந்த ஒலி, மூச்சு, கானம் இவை கொடுக்கும் சக்தி உடலின் ரசாயன மாற்றங்களை ஆக்கப்பூர்வ மானதாக மாற்றுகின்றது என்பர்.
    * நரம்புகளை அமைதி படுத்துகின்றது.
    * இனிமையானது.
    * லலிதா சகஸ்ர நாமம் தொடர்ந்து படிப்பவர்கள் மனித சமுதாயத்திடம் கருணையோடு இருப்பர்.
    * மனம் உறுதிப்படுவதால் உடலும் நோய் எதிர்ப்பு சக்தி பெறுகின்றது.
    * உள்ளுணர்வு துல்லியமாகின்றது.
    * லலிதா சகஸ்ரநாமம் தொடர்ந்து படிப்பவர்கள் தேகசுகத்துடன் இருப்பர்.
    * எந்த தீமையினையும் வெல்லும் சக்தி பெறுவர்.

    மேற்கூறியவை ஆன்மீக உலகில் லலிதா சகஸ்ரநாமம் பற்றி கூறப்படும் கருத்துக்கள். நாமும் பலன் பெறுவோமே!
    Next Story
    ×