search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆடி -18 அன்று காவேரி அம்மனுக்கு தாய் வீட்டு சீதனம்
    X

    ஆடி -18 அன்று காவேரி அம்மனுக்கு தாய் வீட்டு சீதனம்

    ஆடி 18 பண்டிகையின்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் காவேரி அம்மனுக்கு தாய்வீட்டு சீதனங்களை கொண்டு வந்து படைத்து செல்லும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது.
    தமிழ்நாட்டில் காவிரி கரையோரத்தில் அமைந்த முதல் சிவாலயமான தேசநாதேஸ்வரர் கோவில் ஒகேனக்கல்லில் உள்ளது. இந்த கோவில் வளாகத்திற்குள்தான் காவிரி ஆற்றின் சிறப்பை போற்றும் வகையில் காவேரியம்மன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி தாயே அம்மன் வடிவில் இங்கு எழுந்தருளியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

    குருச்சேத்திர போர் முடிந்த பின்னர் போரினால் ஏற்பட்ட பாவங்களை போக்க பஞ்சபாண்டவர்கள் கங்கை நதியில் குளித்தனர். அப்போது பாவங்கள் நீங்க கங்கையில் குளித்தால் மட்டும் போதாது, குடகு மலையில் அகத்தியரின் கமண்டலத்தில் அடைபட்டு கிடக்கும் பொன்னி நதியில் குளிக்க வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா கூறினார். அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த பொன்னி நதியை விடுவிக்க வேண்டி பஞ்சபாண்டவர்கள் விநாயகரை வழிபட்டனர். இதனால் மகிழ்ந்த விநாயகர் காக்கை வடிவில் குடகுமலைக்கு சென்று அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த பொன்னி நதிநீரை தென்திசை நோக்கி தள்ளிவிட்டார்.

    இந்த பொன்னி நதிநீர் வேகமாக ஓடி ஒகேனக்கல்லில் அஷ்வமேத யாகம் செய்து கொண்டிருந்த பிரம்மாவின் யாக குண்டத்தில் விழுந்து அருவிகளாக துள்ளிக்குதித்தது. தென்னாடு செழிக்க உருவான இந்த நதிக்கு காவிரி என்று அகத்திய மாமுனிவர் பெயர் சூட்டினார். பொன்னி நதி, காவிரி என்று பெயர் பெற்ற இடமான ஒகேனக்கல்லில் ஆற்றங்கரையில் ஒரு சிவலிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்தார். அந்த லிங்கத்தை பிரம்மதேவர் தினமும் வழிபட்ட இடம்தான் தற்போது ஒகேனக்கல்லில் தேசநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ள இடமாகும்.

    ஒகேனக்கல் ‘மத்திய ரங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அகத்தியர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த இடத்தில் 13-ம் நூற்றாண்டில் தேசநாதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. மைசூர் மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் இந்த கோவிலை சிறப்பான முறையில் பராமரித்தனர். காவிரி ஆறு உருவானது தொடர்பான புராணத்தில் விநாயகருக்கு முக்கிய இடம் உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி ‘கணேச தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு குளித்தால் விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தேசநாதேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு பிரம்மா பூஜைகள் செய்து வழிபட்டதாகவும், இதனால் இந்த கோவில் ‘தென்னகத்தின் காசி’ என பொருள்படும் ‘தட்சிணகாசி’ என்றும் அழைக்கப்படுகிறது. தேசநாதீஸ்வரர் கோவில் வளாகத்தில் காவேரி அம்மனுக்கு தனிக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒகேனக்கல் தவிர வேறு எங்கும் காவிரித்தாய்க்கு தனிக்கோவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    காவிரி ஆற்றின் பிறப்பிடமான குடகு மலையில் பெண் குழந்தை போன்ற வடிவில் உள்ள காவிரி அம்மன், ஒகேனக்கல்லில் உள்ள கோவிலில் குமரி பெண்ணாக 3½ அடி உயரத்தில் காட்சி அளிக்கிறார். இங்கு வந்து வணங்குபவர்களுக்கு திருமண தடைகள் நீங்கும், குழந்தை பேறு உள்பட கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பல வகையான தோஷபரிகாரங்கள் மற்றும் கடன் தொந்தரவுகள் நீங்க இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    குருச்சேத்திர போரில் பயன்படுத்திய ஆயுதங்களை பாண்டவர்கள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கழுவி பாவங்கள் போக நீராடிய நாள் ஆடி மாதம் 18-ம் நாள் என்று கூறப்படுகிறது. இதனால் ஆடி 18 பண்டிகையின்போது காவேரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழா நடக்கிறது. அப்போது காவிரி ஆறு உற்பத்தியாகும் இடமான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அம்மனுக்கு தாய்வீட்டு சீதனமாக அரிசி, பருப்பு, வளையல், புடவை, ரவிக்கை மற்றும் அச்சுவெல்லம் ஆகியவற்றை கொண்டு வந்து படைத்து செல்லும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது. 
    Next Story
    ×