search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாயன்மார்களால் பாடல் பெற்ற தலம்
    X

    நாயன்மார்களால் பாடல் பெற்ற தலம்

    திருவெண்காடு தலம் நால்வர் மற்றும் பல்வேறு நாயன்மார்களால் பாடல் பெற்ற சிறப்புக் குரியது. இது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    திருவெண்காடு தலம் நால்வர் மற்றும் பல்வேறு நாயன்மார்களால் பாடல் பெற்ற சிறப்புக் குரியது. அது பற்றிய விபரம் வருமாறு:-

    திருஞானசம்பந்தர்- இவர் இத்தலத்தின் இறைவன் பேரில் மூன்று தேவாரத்திருப்பதிகங்கள் அருளி உள்ளார். இத்திருப்பதிகங்களில் திருவெண்காட்டின் இயற்கைக் காட்சியையும், இறைவன் அழகையும் இறைவனுடைய வியா பகத்தன்மையையும், அடியார்களுக்கு அருளும் பெற்றியையும், எமன் திறலைழித்த வன்மையையும், முக்குளநீர்ப் பெருமையையும் கூறியிருக்கின்றார்.

    பசுங்கிளிகளும் இறைவன் திருநாமத்தைப் பண்மொழியால் பயில்கின்றன என்றும், முக்குள நீராடி வழிபடுவர் பிள்ளைப்பேறடைவதுடன் நினைத்த வரம் பெறுவர் என்றும், அவர்களைத் தீவினைகள் தாக்காது என்றும், தொழுவார் தங்கள் நோய்கள் தள்ளிப்போக அருளும் தலைவன் என்றும் இன்னும் பலவாறாக சிவபெருமான் பெருமைகளை பாடி உள்ளார்.

    திருநாவுக்கரசர்- இவர் இத்தலத்தைப்பற்றி இரண்டு திருப் பதிகங்கள் அருளியுள்ளார். மேலும், சேத்திரக் கோவைத் திருத்தாண்டகம், பலவகைத் திருத்தாண்டகம் இவைகளிலும் திருவெண் காட்டைப்பற்றிபாடி அருளி யுள்ளார்.

    திருமுதுகுன்ற திருப்பதிகப்பாடல் ஒன்றில் “ வெண் பாடு மேவிய விகிர்தன் தன்னை” என்று கூறி யிருக்கிறார். சம்பந்தர் பதிகத்தின் முதற்பாடலான “கண் காட்டு நுதலானும்” என்பதைப்போலவே, அப்பர் திருப்பதிக முதல் பாடலும் அமைந்திருப்பது கண்டு இன்புறத்தக்கது.

    திருக்குறுத் தொகைப்பாடல்கள் நெஞ்சைப்பார்த்து அறிவுறுத்துவதாக உள்ளன. “நெஞ்சமே! இறைவன் உறை யும் திருவெண்காடடைந்து உய்வாயாக” என்று கூறுகிறார்.

    திருத்தாண்டகத்தில் சிவபெருமான் திருமேனி அழகையும் இறைவர் எங்கும் தங்கி நிற்கும் எழிலையும் பிச்சை ஏற்றுத்திரியும் தன்மையையும், அடியார்களுக்கு வேண்டும் வரம் அளிக்கும் பண்பையும், இன்னும் இறைவனது செயல்கள் பலவற்றையும் அகப் பொருட்டுறையியல் அழகு பெற அமைத்துத்திருவாய் மலர்ந்தருளியுள்ளார். தாண்டகச் செய்யுளில் “வெண் காடே என்பீராகில் வீடாத வல்வினைநோய் வீட்டலாமே” என அறிவுறுத்துகிறார்.

    சுந்தரமூர்த்தி சுவாமிகள்- இவர் இத்தலத்திற்கு ஒரு திருப்பதிகம் பாடி அருளியுள்ளார். ஒவ்வொரு பாடலின் முற்பகுதியில் இறைவனது சிறப்புக்களை கூறி, பிற்பகுதியில், “இவ்வளவு பெருமைகளை உடைய நீர் மனைகள் தோறும் தலைகையேந்தி விடங்கராகித்திரிவதும், காமனைக் கண்ணழலால் எரித்ததும், பிச்சை ஏற்க எருகேறி அலைவதும், கடலின் நஞ்சுமுண்டதும், வேதம் ஓதித்திரிவதும், யானையை உரித்ததும், அயனும் மாலும் அணுகாவண்ணம் அனல் பிழம்பாய் நின்றதும் எதற்காக” என்று கேட்கும் முறையில் அமைந்திருக்கிறது.

    மாணிக்கவாசக சுவாமிகள்- இவர்அருளிய திரு வாசகத்தின் கீர்த்தித் திருஅகவலில் “விருந்தி னனாகி வெண்காடதனில் குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்” என்று கூறியிருக்கின்றனர். மேலும் திருக்கோவையாரில் “வேலன் புகுந்து வெறியாடுக” என்று தொடங்கும் பாடலிலும் வெண்காட்டைக்குறிப்பிடுகிறார்.
    கபிலதேவ நாயனார்- இவர் இயற்றிய சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்னும் இரண்டு பிரபந்தங்களும் பதினொராந் திரு முறையில் இடம் பெற்றுள் ளன. வெண்காடர் அன்பர் சித்தத்தடங்குவர் என்றும், துயரத்தைத் தீர்ப்பரென்றும் இந்த நூல்களிலுள்ள இரண்டு பாடல்களில் கூறி இருக்கிறார்.

    பரணதேவ நாயனார்-இவர்அருளிய சிவபெருமான் திருவந்தாதி என்ற நூலும் பதினொராம் திருமுறையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. “புகலூர் உடையாய்” என்று தொடங்கும் பாசுரத்தில் “வெண்காடா வேலை விட முண்டாய் வெள்ளேற்றாய் வெண்காடா என்பேனா நான்” என்று அருளிஇருக்கிறார்.

    பட்டினத்தார்- இவர் பாடி அருளிய திருவிடைமருதூர் மும்மணிக் கோவை, திருவேகம் முடையார் திருவந்தாதி ஆகியவைகளும் பதினொராம் திருமுறையிலுள்ளன. மும்மணிக்கோவை, “ தெய்வத்தாமரை” என்று தொடங்கி “தெய்வத்தாமரையே”என்று முடிகிறது. அதன் கடைசி பாடலில் “வெண்காடன்” என்று குறித்திருக்கிறார். திருவந்தாதியில், “நினைவார்கருளும் பிரான்” என்று தொடங்கும் பாடல்களில் சொல்லும் போது திருவெண்காட்டையும் சொல்லி இருக்கிறார்.

    சேக்கிழார்- இவர் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தில் சம்பந்தர் புராணத்திலும்,ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்திலும், திருவெண்காட்டைப் பற்றிக்கூறியிருக்கிறார். திருச்சாய்க்காட்டை வணங்கிய பின் சம்பந்தர் திருவெண்காடு போய் வழிபட்டதை நான்கு பாடல்களில் சொல்லியிருக்கிறார். ஏயர்போன் கலிக்காம நாயனார் புராணத்தில் சுந்தரரர் திருச்சாய்காட்டை வணங்கி, திருவெண்காட்டிற்கு வந்து வழிபட்டுப் பதிகம் பாடி திருநனிபள்ளிக்குச் சென்றதைக் கூறியிருக்கிறார்.
    Next Story
    ×