search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நன்மையை அளிக்கும் நற்சிந்தனை
    X

    நன்மையை அளிக்கும் நற்சிந்தனை

    ஒரு மனிதனுக்கு விளையும் நன்மையும், தீமையும் அவன் செய்யும் செயல்களை பொறுத்தே அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
    சொர்க்கபுரியில் இருந்த புகழ்பெற்ற ஜோதிடர் ஒருவரைப் பார்ப்பதற்காக, பக்கத்து ஊரில் இருந்து விவசாயி ஒருவர் வந்திருந்தார். அவர் வந்தது ஒரு மாலை நேரமாகும். ஜோதிடர் கணிப்பது நிச்சயம் நடந்தே தீரும் என்பதே, அந்த ஊரில் மட்டுமல்லாது சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் அவருக்கான புகழை பரவச் செய்திருந்தது.

    இரவுக்குள் மரணம்

    ஏழை விவசாயியான அவர் தனது ஜாதகத்தை, ஜோதிடரிடம் கொடுத்து, ‘எனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. என் வாழ்வு சிறப்பாக அமைய என் ஜாதகத்தில் ஏதாவது வழியிருக்கிறதா? என்று பார்த்து கூறுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். ஜோதிடரும் அந்த விவசாயியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார்.

    ஜாதகத்தை கணித்துக் கொண்டிருந்த ஜோதிடரின் முகம் சுருங்கியது. அதற்கு காரணம் அந்த விவசாயியின் வாழ்வு அன்று இரவு 8 மணியுடன் முடிவடைவதாக ஜாதகம் கூறிற்று. இரவு 8 மணி அளவில் அவருக்கு ஏற்படும் கண்டமானது அவரது உயிரைப் பறிக்கும் என்று அந்த ஜாதகத்தின் மூலமாக அறிந்து கொண்ட ஜோதிடர், அதனை அந்த விவசாயியிடம் எப்படி கூறுவது என்று தவித்தார்.

    நாளை வாருங்கள்

    பின்னர் விவசாயியிடம் நேரடியாக எதுவும் கூறாமல், ‘ஐயா! எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. அந்த நினைவு இல்லாமல் உங்களுக்கு ஜாதகம் பார்க்க உட்கார்ந்து விட்டேன். இன்று விட்டால் அந்த வேலை தேங்கி விடும். எனவே உங்கள் ஜாதகம் என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இப்போது சென்று விட்டு, நாளை காலையில் வாருங்கள். நான் உங்களுக்கு பலன் கூறுகிறேன்’ என்று மழுப்பலான பதிலை கூறினார்.

    ஜோதிடர் கூறுவது உண்மை என்று நம்பிய விவசாயியும், நாளை காலை தங்களை வந்து பார்க்கிறேன் என்று கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார். அப்போது அங்கு வந்த ஜோதிடரின் மனைவி, ‘உங்களுக்கு எந்த வேலையும் இல்லை என்று சொன்னீர்களே! பிறகு ஏன் அவரிடம் பொய் கூறி அனுப்பினீர்கள்’ என்று கேட்டாள்.

    ‘இங்கிருந்து புறப்பட்டு போகிறாரே அவரது ஆயுள் காலம் இன்று இரவோடு முடியப்போகிறது. அதை அவரிடம் தெரிவிக்க எனக்கு மனமில்லை. அதனால் தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன். அவர் உயிரோடு இருந்தால் தானே நாளை என்னை வந்து பார்க்க முடியும்?’ என்று கூறினார் ஜோதிடர்.

    ண்டபத்தில் ஒதுங்கினார்

    இதற்கிடையில் ஜோதிடரின் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற விவசாயி, தனது ஊருக்கு காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் சென்று கொண்டிருந்த நேரத்தில் வானம் மேக மூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழைத் தூறல் ஆரம்பித்து, வலுப்பெற்றது. இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் விவசாயியால் மேற்கொண்டு தனது பயணத்தை தொடர முடியவில்லை.

    அப்போது அந்த பகுதியில் பாழடைந்த சிவன் கோவில் ஒன்று தென்பட்டது. அங்கு சென்று மழைக்கு ஒதுங்கினார். கோவிலின் மண்டபத்தில் நின்று கொண்டிருந்த அந்த விவசாயி, பாழடைந்து கிடக்கும் கோவிலின் நிலையைக் கண்டு மிகவும் வருந்தினார். மேலும் அவரது மனதில் சில எண்ணங்கள் ஓடின. ‘கோவிலின் கருவறையும், முன் மண்டபமும் இந்த அளவுக்கு கேட்பாரற்று பாழடைந்து போய் கிடக்கிறதே!. மண்டபத்தின் உறுதித் தன்மையை அதில் வளர்ந்துள்ள ஆலமரமும், அரசமரமும் அசைத்து பார்க்கும் வகையில் முளைத்திருக்கின்றதே! நான் மட்டும் ஏழையாக இல்லாமல், போதுமான பணத்துடன் இருந்தால், இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்’ என்று நினைத்துக் கொண்டார்.

    மரணத்தில் இருந்து தப்பினார்

    அத்துடன் அவர் மன ஓட்டம் நிற்காமல் தொடர்ந்தது. சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக் கொண்டார். கோபுரம், ராஜகோபுரம், பிரகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்துக்கு புரோகிதர்களை அமர்த்தி, வேதமந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து, கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓடவிட்டார்.

    அந்த சிந்தனையின் ஊடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியை பார்த்த போது, அங்கே அவரது தலைக்குமேல் கருநாகம் ஒன்று படமெடுத்து நின்று, அவரை கடிக்க தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒரு நொடியும் தாமதிக்காமல் மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார். மண்டபத்தில் இருந்து அவர் சில அடி தூரம் தள்ளி போன மறுநொடி, இடிவிழுந்து அந்த மண்டபம் அப்படியே நொறுங்கி விழுந்தது. அதைக் கண்டு விவசாயி மேலும் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

    ஆச்சரியத்தில் ஜோதிடர்

    அப்போது மணி சரியாக 8 என காட்டியது. மழை ஓய்ந்து போனது. அங்கிருந்து விவசாயி தனது வீடு திரும்பினார். மறுநாள் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு ஜோதிடரை சந்திக்கச் சென்றார். விவசாயியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. ஒருவேளை தான் ஜாதகத்தை சரியாக கணிக்கவில்லையா? என்ற சந்தேகமும் கூட அவருக்கு தோன்றியது.

    தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் ஜோதிட நூல்களை ஆராய்ந்தார். கணக்கு சரியாக இருந்தது. அவர் நேற்று இரவே இறந்திருக்க வேண்டும் என்று தான் ஜோதிட நூல்களும் தெரிவித்தன. இது போன்ற கண்டத்தில் இருந்து ஒருவன் தப்பிக்க வேண்டுமானால், அந்த நபர் சிவன் கோவில் ஒன்றை கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்க வேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது.

    சிந்தனை கூட பலன் தரும்


    ஆனால் இவரோ ஏழை விவசாயி, இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய முடியும்? அதுவும் ஒரு இரவுக்குள் என்று நினைத்தபடியே, நேற்று இரவு என்ன நடந்தது? என்பதை அந்த விவசாயியிடம் கேட்டார் ஜோதிடர். அவரும் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினார். ஜோதிடருக்கு ஈசனின் அருள்புரிந்து விட்டது. அவர் அந்த விவசாயிக்கு மேற்கொண்டு கூற வேண்டிய பலன்களை கூறி அனுப்பினார்.

    கதை கூறும் கருத்து


    ஒரு மனிதனுக்கு விளையும் நன்மையும், தீமையும் அவன் செய்யும் செயல்களை பொறுத்தே அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. நன்மை தரும் செயல்களை செய்யும் ஒருவருக்கு நன்மையான பலன்களே கிடைக்கும். தீய செயல் களில் ஈடுபடுபவன் அதே தீவினையினால் துன்பத்தில் துவளும் வாய்ப்பே வந்தமையும். அதே சமயத்தில் நல்ல செயல்களை செய்ய எண்ணும் சிந்தனையும் கூட ஒருவனுக்கு நற்பயனை கொடுத்து அவனின் வாழ்வை உயர்வு பெறச் செய்யும் என்பதே இந்த கதையின் கருத்தாக அமைந்துள்ளது. கண்டத்தில் இருந்து தப்பிக்க, கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய புண்ணியம் இருந்தால் தான் உண்டு என்று இருக்கும்போது, அதே செயலை தனது சிந்தனையின் வாயிலாக நிறைவேற்றிய அந்த விவசாயியின் வாழ்வானது, தெய்வப்பணி பற்றிய சிந்தனை கூட வாழ்வில் வரும் இடையூறுகளை நீக்கும் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது.

    Next Story
    ×