search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மங்கல வாழ்வு தரும் மண்டைக்காடு பகவதி
    X

    மங்கல வாழ்வு தரும் மண்டைக்காடு பகவதி

    பெண்களின் சபரிமலை என்ற பெயருடன் சிறப்பு பெற்றத் தலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம்.
    பெண்களின் சபரிமலை என்ற பெயருடன் சிறப்பு பெற்றத் தலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம். சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு இருமுடி கட்டி பக்தர்கள் செல்வதைப் போலவே, இங்கும் பெண்கள் பலரும் மாசி மாதத்தில் அம்மனுக்கு விரதம் இருந்து இருமுடி கட்டி ஆலய தரிசனம் காணச் செல்கின்றனர். கோவில் கொடிமரத்துடன் வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தில், அம்மன் புற்று உருவத்தில் இருந்து அருள்பாலித்து வருகிறார்.

    சிவபெருமானின் கட்டளைப்படி பூலோக மக்களை காத்திடும் பொருட்டு, அன்னை பார்வதி தேவி, பத்ரகாளியாய் அவதரித்து பூலோகம் முழுவதும் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நாள், அரபிக்கடல் அருகில் பனை மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் இருந்து ‘ஓம்சக்தி பகவதி காளி சூலினி’ என்ற மந்திர ஒலி தொடர்ச்சியாக காற்றில் மிதந்து வந்தது.

    அந்த மந்திர ஒலி அம்பாளை கட்டி இழுத்தது. பைரவர் என்ற சித்தர் ஸ்ரீசக்கரம் அமைத்து, அதில் அமர்ந்து கொண்டு தேவியின் நாமங்களைக் கூறியபடியே பல ஆண்டுகளாக தியானத்தில் ஈடுபட்டு வந்தார். அவ்வாறு இருந்த காரணத்தால் அவரது உடல் முழுவதும் மண் புற்று வளர்ந்து, அவரை மூடி மறைத்து, ஸ்ரீசக்கரம் புற்றாக காட்சியளித்தது.

    பைரவ சித்தரது தவத்தின் வலிமையையும், சக்தியையும் உணர்ந்த அன்னை, அந்த சித்தருக்கு நேரில் காட்சி கொடுத்தாள். அன்னையின் திருக்காட்சியை காணப்பெற்ற சித்தர் பூரிப்படைந்தார். பின்னர், ‘தாயே! நான் பூஜித்த ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டும்’ என்று வரம் கேட்டார். அன்னையும் அவ்வாறே வரமளித்து அந்த ஸ்ரீசக்கரத்தில் ஐக்கியமாகி விட்டார்.

    ஸ்ரீசக்கரத்தின் மேல் மணல் புற்று வளர்ந்தது. ஒரு நாள் மணல் மேடாகிப் போன அந்த புற்றில் இருந்து ரத்தம் வடிந்தது. இதனை பார்த்து அந்த பகுதி மக்கள் இதுபற்றி பிரசன்னம் பார்த்த போது அங்கு பத்ரகாளித் தாய், பகவதியாக வீற்றிருப்பது தெரிந்தது. இதையடுத்து அங்கு பகவதி அம்மனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. புற்றின் தலைப்பகுதியில் அம்மன் உருவம் உள்ளது. கருவறையில் தரையிலிருக்கும் ஸ்ரீசக்கரம் மேல் உள்ள புற்று நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. தற்போது 15 அடி உயரத்தில் இந்த புற்று காட்சியளிக்கிறது.

    இந்த கோவிலில் கை, கால், தலை போன்ற உடல் உறுப்புகளை மரத்திலும், வெள்ளியிலும் செய்து விற்பனை செய் கிறார்கள். உடல் நலக்குறைவு உள்ளவர்கள், அதனை வாங்கி பாதிக்கப்பட்ட உடல் பகுதியில் தடவி கோவில் மண்டபத்தின் மேல் போட்டால் உடல்நிலை சரியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பச்சரிசி மாவு, வெல்லம் கொண்டு மண்டைஅப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் படைத்தால் தலைவலி குணமாகும்.

    பகவதி அம்மன் கோவிலின் தல விருட்சம் வேம்பு ஆகும். 41 நாட்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுபவர்களுக்கு தீராத நோய்களும் தீர்ந்து விடும். சித்த பிரமை பிடித்தவர்களும் குணமடையும் அதிசயம் இங்கு நடைபெறுகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், தோண்டியும் கயிறும் கோவில் தீர்த்த கிணற்றிற்கு நேர்த்திக் கடனாக செலுத்தி குணமடைகிறார்கள்.

    மேலும் அம்மனுக்கு 27 நெய் தீபம் ஏற்றி வெள்ளியில் கை, கால் உருவங்களை நேர்த்திக்கடனாக செலுத்தி, செவ்வரளி உதிரிப்பூக்கள், 9 உதிரி எலுமிச்சைப் பழங்கள் அம்மனுக்கு செலுத்தி, 9 முறை கருவறையை வலம் வந்தால் சகல உடல் உபாதைகள் மற்றும் நோய்களில் இருந்தும் விடுபடலாம். இந்த நேர்த்திக்கடனை தொடர்ந்து மூன்று செவ்வாய்க்கிழமைகள் செய்ய வேண்டும்.

    இங்குள்ள அம்மன் புற்று வடிவில் உள்ளது. புற்று, மணலால் ஆனது. மண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வீடு கட்டுவது, தடைபட்ட வீட்டு பணிகள் தொடர, நிலம் வாங்க, வாஸ்து கோளாறுகள் நீங்க இந்த தலத்தில் செவ்வாய் அன்று 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு, சிறிது மண்ணை வீட்டில் வைத்து பூஜை செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.

    நாகதோஷம் நிவர்த்தியாக செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் ராகு காலங்களில் இந்த தலத்திற்கு வந்து இரண்டு நெய் தீபம் ஏற்றி, 3 உதிரி எலுமிச்சைப் பழங்கள் அம்மனுக்கு வைத்து தொடர்ந்து மூன்று வாரங்கள் வழிபட்டால் திருமணத் தடை அகலும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.

    Next Story
    ×