search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

    திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது திருக்கோவிலூர் நகரம். இங்கு 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கும் உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மூலவர் பெருமாள் ஒரு காலில் நின்ற நிலையில் மற்றொரு காலை மட்டும் நீட்டி தூக்கிய படி அருள்பாலிக்கிறார். கோவிலின் கோபுர நுழைவு வாயில்கள் கோவிலை ஒட்டி இல்லாமல் கோவிலில் ஒட்டிய தெருக்களின் நுழைவுவாயிலாக அமைய பெற்று இருப்பது இதன் தனி சிறப்பாகும்.

    மேலும் நடுநாட்டு திருப்பதி என்றும் இந்த கோவிலை அழைப்பாளர்கள். 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறார். இவர்கள் இருவரையம் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் மூலவர் சன்னிதிக்கு திருப்பணிகள் நடைபெற்று ஏற்கனவே கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் ராஜகோபுரம், லட்சுமி நாராயணர், லட்சுமி வராஹர், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள் நாச்சியார், சேனை முதலிகள், வீரஆஞ்சநேயர் ஆகிய சன்னிதிகளில் திருப்பணிகள் நடைபெற்று, நேற்று கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    அதன்படி, விழா கடந்த 7-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம், பூர்ணாகுதியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 8-ந்தேதி காலையில் கும்ப ஆராதனம், சுதர்சன யாகமும், மாலையில் பூர்ணாகுதி, சாற்றுமுறையும் நடந்தது. பின்னர் 9-ந்தேதி காலையில் வாஸ்து ஆராதனம், யாகசாலை அலங்காரம், கும்ப ஸ்தாபனமும், மாலையில் கும்ப அலங்காரம், பூர்ணாகுதி, சாற்றுமுறையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலையில் மகாசாந்தி ஹோமம், திருமஞ்சனம், சாற்றுமுறையும் நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு விஸ்வரூபம், அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், ததுத்த யாகமும் நடந்தது. அதை தொடர்ந்து 7 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கும்பங்கள் புறப்பாடு நடைபெற்றது.

    9.10 மணிக்கு ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் கிழக்கு ராஜகோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் கோவிந்தா...! கோவிந்தா...! என்கிற பக்தி கோஷங்களை விண்ணை முட்டும் அளவில் எழுப்பி பெருமாளை வழிபட்டனர். இதை தொடர்ந்து கோபுரத்துக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் 10.10 மணிக்கு லட்சுமி நாராயணர், லட்சுமி வராஹர், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள் நாச்சியார், சேனை முதலிகள், வீரஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளில் உள்ள கோபுர கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    10.30 மணிக்கு மேல் 12 மணிவரை அட்சத ஆசிர்வாதமும், தீர்த்த பிரசாதங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், 1 மணிக்கு சர்வ தரிசனமும் நடைபெற்றது. இரவு ஸ்ரீஆண்டாள்நாச்சியார் சமேச ஸ்ரீதேகளச பெருமாள் பெரிய சேஷ வாகனத்தில் வீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து கலந்து கொண்டனர். முன்னதாக பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    மேலும் அரசு துறை அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி உ.வே.தி.ஸ்ரீநிவாசராமானுஜாச்சாரியார் மேற்பார்வையில் விழாக்குழுவினர்கள் முன்னின்று செய்திருந்தனர்.

    மேலும் கும்பாபிஷேகத்தை காணவந்த பக்தர்களுக்கு நகரில் ஆங்காங்கே பல்வேறு அமைப்பினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் குடிநீர், மோர் ஆகியனவும் வழங்கினர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் ஜெயராமன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மற்றும் சுகாதார வசதிகளை செய்திருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை அமைத்து, போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    கும்பாபிஷேகம் முடிவடைந்தவுடன் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்வதற்காக ஒருவருக்கொருவர் முண்டியடித்து உள்ளே சென்றனர். இதனால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் நெரிசலை சரி செய்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். 
    Next Story
    ×