search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா 24-ந்தேதி பூச்சாட்டுதல் நடக்கிறது
    X

    கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா 24-ந்தேதி பூச்சாட்டுதல் நடக்கிறது

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கட்டுமான பணிகள் முடியாததால் எளிமையாக ஆடித்திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையொட்டி வருகிற 24-ந் தேதி பூச்சாட்டுதல் நடக்கிறது.
    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் மிகவும் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். கோவிலின் உள்மண்டபம் பழுதடைந்த காரணத்தினால் கோவில் முழுவதும் இடிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோவில் திருப்பணிகளுக்காக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இதுவரை சுமார் 40 சதவீதம் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக, கோவில் எதிரே உள்ள மண்டபத்தில் உற்சவர் அம்மனுக்கு தினமும் அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. மூலவர் அம்மன் சிலை பத்திரமாக எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா 20 நாட்களுக்கு மேல் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பெரிய அளவில் இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் ஆடித்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி ஆடி மாதம் பிறக்க இன்னும் ஒருவாரமே உள்ளநிலையில், கோட்டை மாரியம்மன் கோவிலில் இந்தாண்டு ஆடித்திருவிழாவை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வருகிற 24-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது.


    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கட்டுமான பணிகள் பாதியில் நிற்பதை படத்தில் காணலாம்

    இதுகுறித்து சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் மாலா கூறியதாவது:-

    கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தினால் கடந்தாண்டு மாதிரி இந்தாண்டும் எளிமையான முறையில் ஆடித்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதாவது, கம்பம் நடுதல், உற்சவர் ஊர்வலம், பக்தர்களின் உருளுதண்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாது. வருகிற 24-ந் தேதி கோவிலில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு தினமும் அபிஷேகம், பூஜைகள் நடைபெறும். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7, 8, 9-ந் தேதிகளில் 3 நாட்கள் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்யலாம். 8-ந் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி வைக்க உள்ளோம்.

    கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஆடித்திருவிழா மிகவும் பிரபலமானது. ஆனால் கட்டுமான பணிகள் நடப்பதால் மிக எளிமையாக நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் கோவிலில் திருப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு ஆடித்திருவிழா சிறப்பாக நடத்த அனைத்து விதமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×