search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா தொடங்கியது

    கடலூரில் உள்ள பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கடலூரில் உள்ள பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா 20-ந்தேதி முதல் வருகிற 1-ந்தேதி வரை 13 நாட்கள் நடைபெற உள்ளது.

    இத்திருவிழா நேற்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 6 மணிக்கு பாடலீஸ்வரர்-பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், உற்சவர் பஞ்சமூர்த்திக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து கொடிமரம் அருகில் உற்சவர் பஞ்சமூர்த்தி கொண்டு வரப்பட்டார். தொடர்ந்து காலை 8 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதன்பிறகு ராஜவீதியில் இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உற்சவமூர்த்திகள் கோவிலை வந்தடைந்தனர். திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்சமூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் ராஜவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    5-ம் திருவிழாவான 24-ந்தேதி காலையில் அதிகார நந்தி தரிசனமும், இரவில் தெருவடைச்சான் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9-ம் திருவிழாவான 28-ந்தேதி காலை 9 மணி முதல் 10-30 மணிக்குள் தேரோட்டமும் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 30-ந்தேதி இரவில் முருகப்பெருமான் சிவகரதீர்த்தக்குளத்தில் தெப்பத்தில் காட்சி தரும் நிகழ்ச்சியும், 31-ந்தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சியும், இரவில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. 1-ந்தேதி சண்டிகேசுவரர் வீதியுலாவுடன் விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, நாகராஜ் குருக்கள் மற்றும் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×