search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வயலூர் சுப்பிரமணியசாமி கோவில் வைகாசி விசாக திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது
    X

    வயலூர் சுப்பிரமணியசாமி கோவில் வைகாசி விசாக திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது

    திருச்சி அருகே உள்ள வயலூர் சுப்பிரமணியசாமி கோவில் வைகாசி விசாக திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    திருச்சி அருகே உள்ள வயலூர் சுப்பிரமணியசாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. முருகப்பெருமான் தன் வேலினால் தடாகத்தை உண்டாக்கி அம்மையப்பனை வழிபட்ட இடம் என்பதாலும், குமரப்பெருமாள் அருணகிரி நாதருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்த இடம் என்பதாலும் வரலாற்று சிறப்புமிக்க தலமாக குமார வயலூர் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விழாவின்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

    இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா 19-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11.50 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் இரவு 8 மணி அளவில் முத்துக்குமார சாமி வெள்ளி விமானத்தில் வீதி உலா வருகிறார். 20-ந்தேதி நந்தி வாகனத்திலும், 21-ந்தேதி அன்ன வாகனத்திலும், 22-ந்தேதி செவ்வாய்க்கிழமை வெள்ளி மயில் வாகனத்திலும், 23-ந்தேதி ரிஷப வாகனத்திலும், 24-ந்தேதி யானை வாகனத்திலும், 25-ந்தேதி சேஷ வாகனத்திலும், 26-ந்தேதி குதிரை வாகனத்திலும் சிங்கார வேலர் வீதி உலா வருகிறார்.

    27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமாகும். அன்று காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி ரதாரோகணம் கண்டருளுகிறார். மாலை 4 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 28-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×