search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேடபரி நிகழ்ச்சியையொட்டி குதிரை வாகனத்தில் அம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    வேடபரி நிகழ்ச்சியையொட்டி குதிரை வாகனத்தில் அம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    வேப்பிலை மாரியம்மன் கோவிலில் வேடபரி நிகழ்ச்சி - திரளான பக்தர்கள் பங்கேற்பு

    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வேடபரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இதேபோல மணப்பாறை பஸ் நிலையம் அருகே உள்ள முனியப்ப சுவாமி கோவிலிலும் திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் வேப்பிலை மாரியம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர்.

    சித்திரை திருவிழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலை முதலே கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு போட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். இதைத்தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    நேற்று மாலை 5.30 மணியளவில் கோவில் வழக்கப்படி பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி தலைமையில் காட்டு முனியப்பன் கோவில் சென்று பட்டியூர் கிராமங்களின் முக்கியஸ்தர்களை மேளதாள வாத்தியம் முழங்க வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்ததும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட அம்மன், குதிரை வாகனத்தில் அமர்ந்திருக்க பட்டியூர் கிராமங்களின் இளைஞர்கள் குதிரை வாகனத்தை சுமந்து பக்தி பரவசத்துடன் செல்ல வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அம்மன் ராஜவீதிகளின் வழியாக வீதியுலா சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தார்.

    அம்மன் குதிரை வாகனம் சென்ற வழிநெடுகிலும் பக்தர்கள் கூடி நின்று அம்மன் மீது மாலைகளை வீசி பக்தியுடன் வழிபட்டனர். வேடபரி கோவிலில் இருந்து புறப்பட்டதும் நகரில் பல்வேறு தெருக்களில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு வந்தனர்.
    Next Story
    ×