search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்ச பிரகார திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்ச பிரகார திருவிழா நாளை தொடங்குகிறது

    சமயபுரம் மாரியம்மனுக்கு ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சபிரகாரம் என்பது வசந்த உற்சவ திருவிழா நாளை(ஞாயிற்று கிழமை) தொடங்குகிறது.
    சமயபுரம் மாரியம்மனுக்கு ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சபிரகாரம் என்பது வசந்த உற்சவமாகும். பஞ்சபூதங்கள் ஐம்பெருந்தொழில், ஐம்பெருங்கலை, ஐம்பெரும்பீடம் (பிரம்மா, விஷ்ணு, ருத்ரா, மகேஷ்வர, சதாசிவம்) ஐம்பெரும் அவத்தைகள் (பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு, முக்தி) இவற்றை விளக்கும் தத்துவமாக உள்ள பஞ்சப்பிரகார உற்சவம் மாயாசூரனை சம்ஹரிக்க பராசக்தி மகாமாரி வடிவம் எடுத்த இக்கோவிலில் அக்னி நட்சத்திரத்தில் உஷ்ண பிராந்தியை தணிப்பதற்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வசந்த உற்சவம் தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    நவக்கிரகங்களையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் இத்தலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் அஷ்ட புஜங்களுடன் கூடிய நூதன ஆதிபீட சுயம்பு அம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக வருகிற 15-ந் தேதி அன்று பஞ்சபிரகார உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி இக்கோவிலில் இருந்து பாரம்பரியமாக தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்களில் பரிவாரங்கள் புடைசூழ மேளதாளத்துடன் கொள்ளிடத்தில் இருந்து கொண்டு வரப்படும் திருமஞ்சனத்துடன் சிறப்பு வேதபாராயணம், வேதமந்திரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை மகாபிஷேகம் நடைபெறுகிறது.



    தொடர்ந்து இரவு 12 மணிக்கு வெள்ளி விமானத்தில் அம்மன் மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்றும், தங்க கொடிமரம் இரண்டாவது சுற்றும், தங்கரதம் வலம் வரும் பிரகாரம் மூன்றாவது சுற்றும், தெற்கு ரதவீதியில் பாதியும், வடக்கு மாடவாளவீதியில் நான்காவது சுற்றும், கீழரத வீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதியில் ஐந்தாவது சுற்றாகவும் சுற்றி வந்து பஞ்சபிரகார விழா நடைபெறுகிறது.

    முன்னதாக 14-ந் தேதி அம்மன் ரிஷப வாகனத்திலும், 16-ந் தேதி சிம்ம வாகனத்திலும், 17-ந் தேதி முத்துப்பல்லக்கிலும், 18-ந் தேதி தங்க கமல வாகனத்திலும், 19-ந் தேதியன்று வெள்ளிக்குதிரை வாகனத்திலும், 20-ந் தேதியன்று வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21-ந் தேதி கற்பக விருஷ வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×