search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவில் திருவிழாவில் உறவினர்கள் தங்களுக்குள் துடைப்பத்தால் அடித்து கொள்வதை படத்தில் காணலாம்.
    X
    கோவில் திருவிழாவில் உறவினர்கள் தங்களுக்குள் துடைப்பத்தால் அடித்து கொள்வதை படத்தில் காணலாம்.

    வினோத வழிபாடு - துடைப்பத்தால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய மாமன்-மைத்துனர்கள்

    ஆண்டிப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் மாமன்-மைத்துனர்கள் துடைப்பத்தால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாடு நடந்தது.
    தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில் திருவிழாவில் முதல் 2 நாட்கள் பொங்கல் வழிபாடு, முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

    பொதுவாக கோவில் திருவிழாவில் கடைசி நாளில் மாமன், மைத்துனர்கள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இங்கு கடைசி நாளில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய மாமன்மார்கள், மைத்துனர்களை துடைப்பத்தால் அடித்து வினோத நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம்.

    அதன்படி நேற்று விழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியில் மாமன்-மைத்துனர்கள் ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அவ்வாறு அடித்துக் கொள்வதற்கு முன்பு அந்த துடைப்பத்தை கழிவுநீரிலும், சேற்றிலும் தொட்டுக் கொண்டனர். இதில் சிலர் சேற்றில் படுத்து இருந்தனர். அவர்களை துடைப்பத்தால் உறவினர்கள் அடித்தனர். இந்த வினோதமான வழிபாட்டை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.

    துடைப்பத்தை கழிவுநீரில் நனைத்து அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் என்றும், நீண்ட நாட்களாக பிரிந்து வாழும் உறவினர்களுக்கு இடையே மீண்டும் இணக்கம் ஏற்படும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 
    Next Story
    ×