search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புள்ளம்பாடி குளுந்தாளம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.
    X
    புள்ளம்பாடி குளுந்தாளம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

    குளுந்தாளம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

    புள்ளம்பாடி குளுந்தாளம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் குளுந்தாளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் கடந்த மாதம் 17-ந் தேதி முதல் காப்புக்கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. 25-ந் தேதி மறுகாப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து திருவிழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    அன்னம், மயில், சிம்மம், காமதேனு, ரிஷபம், யானை, குதிரை போன்ற வாகனங்களில் அம்மன் திருவீதியுலா வந்து அருள் பாலித்தார். இதில், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதோடு தினமும் மாலை 6 மணிக்கு அலங்கார மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு நகர பொதுமக்களின் சார்பில் செண்டைமேளம் முழங்க அம்மன் விக்ரகத்தை ஊர்வலமாக எடுத்து வந்து தேரில் வைத்தனர். அப்போது 201 ஆடுகள் அம்மனுக்கு பலி காணிக்கை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் புள்ளம்பாடி, இ.வெள்ளனூர், பு.சங்கேந்தி, கோவண்டாகுறிச்சி, கல்லக்குடி, செம்பரை, ஆலம்பாடி மேட்டூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மற்றும் திருப்பணி குழுவினர் பொதுமக்கள் செய்திருந்தனர். லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று(வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு சாமி சிலை தாங்கிய தங்க பல்லக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை(வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் விடையாற்றியும், மாலை 6 மணிக்கு சாமி குடிபுகுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 
    Next Story
    ×