search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுசீந்திரம் தெப்பத்திருவிழா
    X

    சுசீந்திரம் தெப்பத்திருவிழா

    வருடம் தோறும் சித்திரை திருவிழா 10-ம் நாள் இரவு சிவனும், விஷ்ணுவும் தெப்பத்தில் அமர்ந்து தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வருகின்றனர்.
    வருடம் தோறும் சித்திரை திருவிழா 10-ம் நாள் இரவு சிவனும், விஷ்ணுவும் தெப்பத்தில் அமர்ந்து தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வருகின்றனர். ஜனத்திரள் மத்தியில் வீதிகளில் உருண்டோடி வரும் தேர் போன்று, தண்ணீரில் மிதக்கின்ற நீளமான மரத்தடிகள் மீது சட்டங்கள் பொருத்தி தேர் போன்று அதை அமைத்து மின்விளக்குகள் மற்றும் பூமாலைகளால் அலங்காரம் செய்வித்து உமா-மகேஸ்வர் மற்றும் திருமால் உற்சவ மூர்த்திகளை எழுந்தருளச்செய்து நாதஸ்வர மேளதாளங்கள் இசைக்க காக்கமூர் மற்றும் சுசீந்திரம் இளைஞர்களால் வடம்பிடித்து தண்ணீரில் இழுத்து வரப்படுகிறது.

    தெப்பக்குளத்தை சுற்றி நான்குபுறமுள்ள படிக்கட்டுகளில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டு தெப்பக்குள மண்டபத்தில் மின்விளக்குகள் அமைத்து தீபஅலங்கார திவ்விய தரிசன காட்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் வருடம்தோறும் காணுகின்ற வகையில் தெப்பத்திருவிழா பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திலேயே நடைபெறும் மிகப்பெரிய தெப்பத்திருவிழா இதுவேயாகும். இவ்வளவு அமைப்போடு கூடிய தெப்பத்திருவிழா தமிழ்நாட்டில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.

    மார்கழி திருவிழா நடக்கும் 5, 7, 9 ஆகிய நாட்களில் மட்டும் மகாவிஷ்ணு சிவபெருமானோடு வீதியுலாவிற்கு வருகின்றார். ஆனால் சித்திரை தெப்பத்திருவிழா நடக்கும் 10 நாட்களிலும் சிவனோடு, விஷ்ணுவும் வீதியுலா வருகை தந்து பத்தாம் நாள் தெப்பத் திருவிழாவின்போதும் தெப்பத்தில் எழுந்தருளுகிறார். ஆக, மகாவிஷ்ணுவிற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற விழாவாக சித்திரை திருவிழா அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். சித்திரை, மார்கழி திருவிழாவின்போது தேரோட்டத்தில் பங்கேற்காத மகாவிஷ்ணு தெப்பத்திருவிழாவில் மட்டும் தெப்பத்தில் எழுந்தருளுகிறார்.

    தரணியில் பரணிபாடும் இவ்விழா பரணிநட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. மார்கழியை போல் சித்திரை திருவிழாவிலும் 10 நாட்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மார்கழி திருவிழா முடிந்து 3 மாத இடைவெளிக்குப்பிறகு சித்திரை திருவிழா நடக்கின்றது. இது தாணுமாலயம் திருக்கோவிலின் 2-வது பெரிய திருவிழாவாகும். சுசீந்திரம் கோவில் நிர்வாகத்தோடு புகழ்பெற்ற ஆதீன மடங்களும், குறிப்பாக சுசீந்திரம் திருவாவடுதுறை ஆதீன மடமும் துணையாய் இருந்து திருவிழாவினை சிறப்பிக்கின்றன. இம்மடத்தின் சார்பில் 4 நாட்கள் சமய வளர்ச்சி மாநாடும், தேவார பாடசாலை ஆண்டுவிழாவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 
    Next Story
    ×